டி-20 உலகக் கோப்பை கிரக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தியா அணி தற்போது வரை விளையாடியுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மற்றொரு பிரிவில் மழை காரணமாக பல்வேறு போட்டிகள் ரத்தாகி உள்ளன. இதன்காரணமாக எந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதில் பெரும் ஆர்வம் எழுந்துள்ளது. 


 


இந்நிலையில் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 15 ரன்களில் நிகிடி பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கே.எல். ராகுல் 9 ரன்களுக்குநிகிடி பந்தில் ஆட்டமிழந்தார். 


 


பின்னர் வந்த விராட் கோலி 2 பவுண்டரிகள் அடித்து சிறப்பாக தொடங்கினார். எனினும் யாவரும் நிகிடி பந்தில் பெவிலியன் திரும்பி ஏமாற்றம் அளித்தார். அடுத்த வந்த தீபக் ஹூடா ரன் எதுவும் எடுக்காமல் நாரக்கே பந்தில் ஆட்டமிழந்தார். இதன்காரணமாக இந்தியா 8 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் வந்த ஹர்திக் பாண்ட்யா 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். 


 






அப்போது களத்தில் இருந்த சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்ட தொடங்கினார். இவர் அசத்தலாக விளையாடி 30 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். ஒரு புறம் விக்கெட் விழுந்து கொண்டிருந்தாலும் மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்டி வந்தார். இவர் 40 பந்துகளில் 3 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் உதவியுடன் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  இதன்காரணமாக இந்தியா அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா சார்பில் நிகிடி 4 விக்கெட்களையும், பார்னல் 3 விக்கெட்களையும் எடுத்தனர்.  


முன்னதாக இன்றைய போட்டியில் களமிறங்கியதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். இவர் 2007 ஆம் ஆண்டு தொடங்கிய முதல் டி20 உலகக் கோப்பை தொடர் முதல் அனைத்து டி20 உலகக் கோப்பை தொடர்களிலும் பங்கேற்றுள்ளார். இவர் தற்போது வரை 36 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். 


அதிக டி20 உலகக் கோப்பை போட்டிகளில் களமிறங்கிய வீரர்கள்: 


ரோகித் சர்மா- 36 


தில்ஷான்- 35 


ஆப்ரிதி-34 


பிராவோ-34


மேலும் படிக்க: டி20 உலகக் கோப்பை போட்டிகளில் 22 இன்னிங்ஸில் ஆயிரம் ரன்கள் அசத்திய கோலி.. புதிய சாதனை