டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் தற்போது வரை நடைபெற்றுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இந்நிலையில் இன்று இந்தியா அணி தன்னுடைய மூன்றாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 


இன்றைய போட்டியில் களமிறங்கியதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். இவர் 2007 ஆம் ஆண்டு தொடங்கிய முதல் டி20 உலகக் கோப்பை தொடர் முதல் அனைத்து டி20 உலகக் கோப்பை தொடர்களிலும் பங்கேற்றுள்ளார். இவர் தற்போது வரை 36 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். 


 






அதிக டி20 உலகக் கோப்பை போட்டிகளில் களமிறங்கிய வீரர்கள்: 


ரோகித் சர்மா- 36 


தில்ஷான்- 35 


ஆப்ரிதி-34 


பிராவோ-34


முன்னதாக கடந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அசத்தலாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 39 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் விளாசி அசத்தினார். இந்தப் போட்டியில் மூன்றாவது சிக்சர் விளாசியதன் மூலம் ரோகித் சர்மா யுவராஜ் சிங் சாதனையை முறியடித்திருந்தார். 


டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா சார்பில் அதிக சிக்சர் அடித்த வீரர்கள்:


ரோகித் சர்மா - 36 


யுவராஜ் சிங்- 33 


விராட் கோலி- 24 


ரோகித் சர்மா தற்போது வரை 36 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் 33  இன்னிங்ஸில் விளையாடி 919 ரன்கள் எடுத்துள்ளார். இவருக்கு முன்பாக இந்தப் பட்டியலில் கிறிஸ் கெயில்(965), விராட் கோலி (1002), மகேலா ஜெயவர்தனே(1016) ஆகியோர் உள்ளனர். தற்போது மகேலா ஜெயவர்தனே மற்றும் கெயில் ஆகிய இருவரும் டி20 உலகக் கோப்பை தொடர்களில் விளையாட வில்லை. இதன்காரணமாக விராட் கோலியுடன் இணைந்து ரோகித் சர்மா முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


சற்று முன்பு வரை இந்தியா அணி 5 விக்கெட் இழந்து 53 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. 


ஹெட் டூ ஹெட் :


சர்வதேச டி20 போட்டிகளை பொறுத்தவரையில் இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளது. அதில், இந்தியா 13 முறையும், தென்னாப்பிரிக்கா 9 முறை வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகளுக்கு முடிவில்லை. 


அதேபோல், உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை இரு அணிகளும் 5 முறை மோதியுள்ளது. அதிலும் இந்தியா 4 முறையும், தென்னாப்பிரிக்கா ஒரே ஒரு முறையும் வெற்றி கண்டுள்ளது.