டி-20 உலகக் கோப்பை கிரக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தியா அணி தற்போது வரை விளையாடியுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மற்றொரு பிரிவில் மழை காரணமாக பல்வேறு போட்டிகள் ரத்தாகி உள்ளன. இதன்காரணமாக எந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதில் பெரும் ஆர்வம் எழுந்துள்ளது. 


இந்நிலையில் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 15 ரன்களில் நிகிடி பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கே.எல். ராகுல் 9 ரன்களுக்குநிகிடி பந்தில் ஆட்டமிழந்தார். 


 






பின்னர் வந்த விராட் கோலி 2 பவுண்டரிகள் அடித்து சிறப்பாக தொடங்கினார். எனினும் யாவரும் நிகிடி பந்தில் பெவிலியன் திரும்பி ஏமாற்றம் அளித்தார். எனினும் இந்தப் போட்டியில் 11 ரன்கள் எடுத்திருந்த போது டி20 உலகக் கோப்பை தொடரில் 1000 ரன்களை கடந்த முதல் இந்தியா வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். இவர் தற்போது வரை 22 இன்னிங்ஸில் விளையாடி 1001 ரன்களை அடித்துள்ளார். இதன்மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 1000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். இவருக்கு முன்பாக இலங்கை அணியின் மகேலா ஜெயவர்தனே 1000 ரன்களை கடந்து உள்ளார். 


டி20 உலகக் கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள்: 


மகேலா ஜெயவர்தனே- 1016 ரன்கள் :


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேலா ஜெயவர்தனே டி20 உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனை தற்போது வரை தன்வசம் வைத்துள்ளார். இவர் 31 டி20 உலகக் கோப்பை இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 1016 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். அத்துடன் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் 7 முறை அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். 


விராட் கோலி- 1001 ரன்கள்:


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஒரே உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார். இவர் நடப்பு உலகக் கோப்பை தொடரிலும் 2 அரைசதம் விளாசி அசத்தி வருகிறார். இவர் தற்போது வரை 24 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் 22 இன்னிங்ஸில் விளையாடி 1001 ரன்கள் குவித்துள்ளார். இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இவர் முதலிடம் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. 


கிறிஸ் கெயில்- 965 ரன்கள்:


டி20 போட்டிகளில் எப்போதும் அதிரடி காட்டும் யுனிவர்செல் பாஸ் கிறிஸ் கெயில் டி20 உலகக் கோப்பை போட்டிகளிலும் தன்னுடைய அதிரடியை தொடர்ந்து காட்டியுள்ளார். இவர் 26 இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 965 ரன்களை இவர் விளாசி உள்ளார். மேலும் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் 9 முறை அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். 


ரோகித் சர்மா- 919 ரன்கள்:


இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தற்போது வரை 36 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி 904 ரன்கள் அடித்துள்ளார். நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இவர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்து முன்னேறும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.