2022ம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 போட்டிகளின் முதல் பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய இடங்கள் இடம்பெற்றுள்ளன.
இரண்டாவது பிரிவில், இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தாலும், ஒரு சில முக்கிய போட்டிகள் மழையால் ரத்து செய்யப்படுவது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற தென்னப்பிரிக்கா - ஜிம்பாப்வே இடையேயான போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றிருக்க வேண்டிய போட்டி ஆகும். ஆனால், மழை காரணமாக புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. அயர்லாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டிய போட்டியை பறிகொடுத்தது இங்கிலாந்து.
அதேபோல, ஆப்கானிஸ்தான் அணி ஆடவேண்டிய 2 போட்டிகள் ரத்தாகியுள்ளன. முதல் பிரிவில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒரு போட்டியில் மட்டுமே ஆடி உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தது. நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் ரத்தானது.
இந்நிலையில், இன்று நடைபெறவிருந்த மேலும் இரண்டு போட்டிகள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதவிருந்த சூப்பர் 12 சுற்று போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்கிவிருந்தது.
மெல்போர்ன் நகரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளுக்கிடையேயான போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை காரணமாக முக்கிய போட்டிகள் ரத்து செய்யப்படுவது அணிகளின் அரை இறுதி வாய்ப்பை பெரிய அளவில் பாதிக்கிறது.
இன்றைய இரண்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், முதல் பிரிவின் புள்ளி பட்டியலில் எந்த இடத்தில் எந்த அணிகள் இருக்கிறது என்பதை பார்ப்போம். இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள நியூசிலாந்து அதிக நெட் ரன் ரெட் அடிப்படையில் 3 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மூன்று புள்ளிகளை எடுத்திருந்தபோதிலும், நெட் ரன் ரேட் அடிப்படையில் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் அயர்லாந்து மூன்றாவது இடத்திலும் ஆஸ்திரேலியா நான்காவது இடத்திலும் உள்ளது. இரண்டு புள்ளிகளுடன் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் கடைசி இரண்டு இடங்களை பிடித்துள்ளது.
இரண்டாவது பிரிவை பொறுத்தவரை, விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள இந்தியா முதல் இடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மூன்று புள்ளிகள் பெற்றிருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்தையும் ஜிம்பாப்வே மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
இரண்டு புள்ளிகளுடன் வங்கதேசம் நான்காவது இடத்தில் உள்ளது. விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ள பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகள் கடைசி இரண்டு இடத்தை பிடித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் தற்போது மழை கொட்டி வருவதால், எஞ்சிய போட்டிகள் நடைபெறுவது கேள்விக்குறியாகியுள்ள நிலையுள்ளது. அவ்வாறு நடைபெற்றாலும் போட்டி ரத்தான அணிகள் கட்டாயம் மிகப்பெரிய வெற்றியை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.