ஆஸ்திரேலியாவில் இன்று 8வது டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் தகுதி சுற்று போட்டியில் ஆசிய கோப்பை சாம்பியனான இலங்கை அணியும், நமீபியா அணியும் நேருக்குநேர் மோதியது. 


முதலில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் சனகா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் நமீபியா அணியின் தொடக்க வீரர்களாக மைக்கேல் வான் லிங்கன் மற்றும் திவான் லா காக் களமிறங்கினர். இருவரும் 3 மற்றும் 9 முறையே அவுட்டாகி வெளியேற, அடுத்து வந்த லோஃப்டி-ஈடன், பார்ட் ஓரளவு தாக்குபிடித்து நமீபியா அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சி மேற்கொண்டனர். 


தொடர்ந்து லோஃப்டி-ஈடன் 12 பந்துகளில் 20 ரன்கள் அடித்து கருனரத்னே பந்துவீச்சில் குசல் மெண்டீசிடம் கேட்சானார்.  களமிறங்கிய நமீபியா கேப்டன் ஈராஸ்மஸும் தன் பங்கிற்கு 20 ரன்களில் வெளியேற, நிதானமாக ஆடிய பார்ட்டும் 24 பந்துகளில் 26 ரன்கள் அடித்து நடையைக்கட்டினார். 






ஒரு கட்டத்தில் 6 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்களுக்கு நமீபியா தடுமாறியது. அடுத்து களம் கண்ட ஜான் ஃப்ரைலின்க் மற்றும் ஸ்மிட் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களின் பந்தை நாலாபுறமும் சிதறவிட்டனர். 


அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜான் ஃப்ரைலின்க் கடைசி ஓவரின் கடைசி பந்தில் ரன் அவுட் ஆக, நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது. ஸ்மிட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 16 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்தார். 


164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி முதல் பந்தே பெளண்டரியுடன் தொடங்கியது.


அடுத்த இலங்கையின் 12வது ரன்னில் குசல் மெண்டீஸ் 6 ரன்களில் அவுட்டாக, மற்றொரு தொடக்க வீரரான நிசன்காவும் 9 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து தனுஷ்க குணதிலகா தான் சந்தித்த முதல் பந்தே ரன் எதுவும் இல்லாமலும், தனஞ்சய டி சில்வா 12 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். 






விக்கெட் ஸ்டாண்ட் செய்ய வேண்டும் என்ற முயற்சியில் பானுகா ராஜபக்ச மற்றும் தசுன் ஷனகா உள்ளே நுழைத்தனர். இவர்கள் களம் கண்டபோது இலங்கை அணி 40 ரன்களுக்குள் 4 விக்கெட்டை இழந்து தடுமாறி  கொண்டு இருந்தது. 20 ரன்கள் எடுத்திருந்தபோது ராஜபக்ச, ஷால்ட்ஸ் பந்துவீச்சில் திவானிடம் கேட்சானார். தொடர்ந்து ஓரளவு தாக்குபிடித்த தசுன் ஷனகாவும் 29 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். 


 அடுத்தடுத்து இலங்கையின் விக்கெட்கள் மளமளவென சரிய 19 ஓவர்களில் 108 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நமீபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


நமீபியா அணியில் டேவிட் வைஸ், ஸ்கால்ட்ஸ், ஷிகோன்கோ மற்றும் ஜான் ஃப்ரைலின்க் தலா இரண்டு விக்கெட்களும், ஸ்மிட் ஒரு விக்கெட்டும் கைப்பற்றி இருந்தனர்.