ஆஸ்திரேலியாவில் இன்று 8வது டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இருக்கிறது. இந்த தொடர் (இன்று) அக்டோபர் 16 தொடங்கி அடுத்த மாதம் நவம்பர் 13 வரை நடைபெற இருக்கிறது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த தொடரில் 16 அணிகள் கலந்துகொண்டு, ஏழு ஆஸ்திரேலிய நகரங்களில் 45 போட்டிகளில் விளையாட இருக்கின்றனர்.
இந்த நிலையில் இன்று தொடங்கும் டி 20 உலகக் கோப்பையின் தகுதி சுற்று போட்டிகளில் ஆசிய கோப்பை சாம்பியனான இலங்கை அணியும், நமீபியா அணியும் நேருக்குநேர் மோத இருக்கின்றனர். இந்திய நேரப்படி இந்த போட்டி காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
இலங்கை அணி தரவரிசையில் பின்தங்கியதால் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது. அதன் காரணமாக தற்போது இலங்கை அணி தகுதி சுற்று போட்டியில் நமீபியா அணியை எதிர்கொள்கிறது. கடந்த 2021 ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை அணியில் இலங்கை அணி, நமீபியா அணியை சந்தித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் மற்றொரு போட்டியில் ஐக்கிய அரபு அமீரகமும், நெதர்லாந்து அணிகளும் பிற்பகல் 1.30 மணிக்கு மோத இருக்கின்றனர். இந்த இரண்டு அணிகளும் டி20 போட்டிகளில் இதுவரை 8 முறை நேருக்குநேர் மோதி தலா 4 போட்டிகளில் வென்றுள்ளனர்.
டி20 உலக கோப்பை தொடரில் அறிமுகமாகும் புதிய விதிமுறைகள்:
டி20 உலககோப்பை போட்டியில் ஐ.சி.சி. மாற்றி அமைத்த புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படுகிறது. அவை பின்வருமாறு:
- பேட்ஸ்மேன் கேட்ச் ஆகும் போது, அதற்குள் எதிர்முனையில் உள்ள வீரர் பேட்டிங் முனைக்கு ஓடிவந்துவிட்டால் அவர் தான் அடுத்த பந்தை முன்பு எதிர்கொள்வார். இனி அதற்கு பதிலாக புதிதாக களம் இறங்கும் வீரர் தான் அடுத்த பந்தை சந்திக்க வேண்டும். அதே சமயம் அந்த வீரர் ஓவரின் கடைசி பந்தில் கேட்ச் ஆனால் இந்த விதிமுறை பொருந்தாது.
- குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காவிட்டால் தாமதிக்கும் நேரத்தை கணக்கில் கொண்டு போட்டியின் கடைசி நேரத்தில் பீல்டிங் அணி எல்லைக்கோடு அருகே நிறுத்தப்படும் ஒரு பீல்டரை உள்வட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும். இது எதிரணி பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகள் விரட்ட உதவிகரமாக இருக்கும்.
- பவுலர் பந்துவீசும்போது பேட்ஸ்மேன் பந்துவீசுவதற்கு முன்பே கிரீசை விட்டு வெளியேற கூடாது. அவ்வாறு வெளியேறினால் பவுலர் ரன்-அவுட் செய்வார். அதற்கு ‘மன்கட்' என்று அழைக்கப்படும் இந்த ரன்-அவுட் சர்ச்சைக்கு தீர்வு காணும் வகையில் அதிலும் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இனி இது ரன் அவுட்டாகவே எடுத்து கொள்ளப்படும்.