2022 டி20 உலகக் கோப்பையின் 37வது ஆட்டத்தில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றைய போட்டியில் நியூசிலாந்து - அயர்லாந்து அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதிபெறும்.
இதையடுத்து, முதலில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன் அடிப்படையில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன் மற்றும் டெவான் கான்வே களமிறங்கினர். இருவரும் 32 மற்றும் 28 ரன்கள் முறையே வெளியேற, நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்தார்.
கடைசி நேரத்தில், அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோசுவா லிட்டில் சிறப்பாக பந்து வீசி நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், ஜேம்ஸ் நீஷம் மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றி ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். இந்த உலகக் கோப்பையில் இது இரண்டாவது ஹாட்ரிக் விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோசுவா லிட்டில் தான் வீசிய நான்கு ஓவர்களில் வெறும் 22 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் தற்போது வரை டி20 உலகக் கோப்பை தொடரில் ஹாட்ரிக் எடுத்த வீரர்கள் யார் யார்?
பிரேட் லீ (2007 ):
2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா வீரர் பிரேட் லீ ஹாட்ரிக் எடுத்து அசத்தினார். அவர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஷகிபுல் ஹசன், மோர்தாசா மற்றும் அலோக் கபாலி ஆகியோரின் விக்கெட்டை எடுத்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் எடுக்கப்பட்ட முதல் ஹாட்ரிக் இதுவாகும்.
கார்டிஸ் காம்பர்(2021):
2007 ஆம் ஆண்டிற்கு பிறகு 2021 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 3 பேர் ஹாட்ரிக் எடுத்து அசத்தினர். முதலில் அயர்லாந்து வீரர் கார்டிஸ் காம்பர் நெதர்லாந்து அணிக்கு எதிராக ஹாட்ரிக் எடுத்து அசத்தினார். அத்துடன் அவர் 4 பந்துகளில் 4 விக்கெட் எடுத்து அசத்தினார். இதன்மூலம் டி20 போட்டிகளில் 4 பந்தில் 4 விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
வணிந்து ஹசரங்கா(2021):
2021 ஆம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடரில் ஷார்ஜாவில் இலங்கை- தென்னாபிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஹசரங்கா தென்னாப்பிரிக்கா அணியின் மூன்று விக்கெட்களை சாய்த்து ஹாட்ரிக் சாதனைப் படைத்தார். இவர் மார்க்கரம், பவுமா மற்றும் பிரிட்டோரியஸ் விக்கெட்களை எடுத்து ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.
காகிஷோ ரபாடா(2021):
அதே டி 20 உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா வீரர் ரபாடாவும் ஹாட்ரிக் எடுத்து அசத்தினார் . இவர் ஷார்ஜாவில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இதை செய்தார். அவர் வோக்ஸ், மோர்கன் மற்றும் ஜோர்டன் விக்கெட்களை அடுத்தடுத்து எடுத்து அசத்தினார்.
கார்த்திக் மெய்யப்பன்(2022):
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான முதல் சுற்று போட்டியில் யுஏஇ வீரர் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் எடுத்தார். இவர் இலங்கை அணியின் பணுகா ராஜாபக்சே, அஷ்லங்கா மற்றும் ஷனகா ஆகியோரின் விக்கெட்டை எடுத்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். இதன்மூலம் டி20 உலகக் கோப்பை தொடரில் ஹாட்ரிக் எடுத்த 5வது வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.