டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரை கத்துக்குட்டி அணிகள் என்று அழைக்கப்படும் ஜிம்பாவே, அயர்லாந்து, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதி வாய்ப்பை கிட்டதட்ட இழந்தாலும், களத்தில் அவர்களின் முயற்சியும், ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற தீவிர வெறியும் பல கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 


இந்தநிலையில், பிரிஸ்பேனில் உள்ள தி கப்பாவில் இன்று டி20 உலகக் கோப்பை குரூப் ஏ பிரிவில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணி, அயர்லாந்து அணியை சந்தித்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக வார்னர் மற்றும் ஆரோன் பின்ச் களமிறங்கினர். 


அதிரடி ஆட்டக்காரர் வார்னர் 3 ரன்களில் வெளியேற, ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பொறுமையாக விளையாடி 44 பந்துகளில் 63 ரன்களில் அவுட்டானார். அதனை தொடர்ந்து களமிறங்கிய மிட்சல் மார்ஸ் 28 ரன்களும், மேக்ஸ்வல் 12 ரன்களும், ஸ்டொய்னிஸ் 35 ரன்களும் எடுத்து நடையைக்கட்டினர். 


இறுதிவரை டிம் டேவிட் 15 ரன்களுடனும், வேட் 7 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. 


180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி ஆரம்பமே அதிர்ச்சி அளித்தது. 25 ரன்களுக்குள் அயர்லாந்து அணி 5 விக்கெட்களை இழந்து தடுமாற, மறுமுனையில் லோர்கன் டக்கர் மட்டும் 71 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் அயர்லாந்து அணி 18.1 ஓவர் முடிவில் 137 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்மூலம், ஆஸ்திரேலியா அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 


இப்படியான வெற்றியை ஆஸ்திரேலியான பெற்றிருந்தாலும் இன்றைய போட்டியின் ஹீரோ பாரி மெக்கார்த்தி தான். அப்படி என்னவென்று கேட்டால் இதோ- 14வது ஓவரின் இரண்டாவது பந்தில் மார்க் அடேர், ஃபுல் லெந்த்தில் மெதுவாகப் பந்து வீசினார். அப்போது மார்கஸ் ஸ்டோனிஸ் ஒரு அபாரமான சிக்ஸருக்கு தூக்கினர். அந்த பந்தானது போதுமான உயரத்தைப் பெற்றிருந்தாலும், தூரம் கிடைத்ததாகத் தெரியவில்லை.






அந்த நேரத்தில் எல்லைக்கோட்டில் இருந்த மெக்கார்த்தி, லாபகமாக தாவி எல்லைக்கோட்டுக்குள் பந்து சென்றுவிடாமல் தாவி தடுத்து வெளியே எறிந்தார். இதையடுத்து, மெக்கார்த்தி தடுத்த பந்து சிக்ஸர் சென்றதா என மூன்றாவது நடுவர் சரிபார்த்தார். அப்போது, அது சரியான முறையில் தடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, தற்போது மெக்கார்த்தி பந்தை தடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 






மேலும், வார்னர், ஆரோன் பின்ச் மற்றும் மிட்சல் மார்ஸ் விக்கெட்களையும் பாரி மெக்கார்த்தி எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.