2022 ஆம் ஆண்டுக்கான டி-20 உலக கோப்பையில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ் நிறுவனத்தின் சினிமா திரையரங்குகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் ஐநாக்ஸ் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. வரும் அக்டோபர் 23ஆம் தேதி,  பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் போட்டியில் தொடங்கி, அரையிறுதி போட்டி, இறுதி போட்டி என இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளும் ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.


ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையின் எட்டாவது பதிப்பு அக்டோபர் 16-ஆம் தேதி தொடங்குகிறது. சூப்பர் 12 போட்டிகள் அக்டோபர் 22ஆம் தேதி தொடங்குகிறது. இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் தேதி மெல்போர்னில் நடைபெற உள்ளது.


இதுகுறித்து ஐநாக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "25க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் நேரலையாக போட்டிகள் திரையிடப்படும். திரையரங்குகளில் கிரிக்கெட்டை திரையிடுவதன் மூலம், நம் நாட்டில் மிகவும் விரும்பப்படும் விளையாட்டான கிரிக்கெட்டுடன், மாபெரும் திரை அனுபவத்தையும், இடிமுழக்க ஒலியையும் ஒருங்கே கொண்டு வருகிறோம். 


உலகக் கோப்பையின் உற்சாகமும் உணர்ச்சிகளும் இந்தக் கலவையுடன் சேர்ந்து, அதன் விளைவாக கிரிக்கெட் பிரியர்களுக்கு மெய்நிகர் விருந்தாக இருக்க போகிறது. 74 நகரங்களில் 165 மல்டிபிளக்ஸ்கள், இந்தியா முழுவதும் 705 திரைகளில் மொத்தம் 1.57 லட்சம் இருக்கைகளை ஐநாக்ஸ் கொண்டுள்ளது.


இந்த ஆண்டின் தொடக்கத்தில் மார்ச் மாதத்தில், ஐநாக்ஸ் மற்றும் பிவிஆர் நிறுவனங்கள் இணைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், நாட்டின் மிக பெரிய மல்டிபிளக்ஸ் நிறுவனமாக இது உருவெடுத்துள்ளது.


டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டியில் களமிறங்க உள்ளது. இந்தப் போட்டிகள் வரும் 17 மற்றும் 19ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. 


டி20 உலகக் கோப்பை 2022 தொடர் இம்முறை ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது. வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் டி20 உலகக் கோப்பையின் முதல் சுற்று தொடங்க உள்ளது. முதல் சுற்றிலிருந்து தகுதி பெறும் 4 அணிகள் அடுத்து நடைபெறும் சூப்பர் 12 சுற்றில் மோதும்.


சூப்பர் 12 சுற்றுக்கு இந்தியா,ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் தகுதி பெற்றுள்ளன. இந்தச் சூழலில் இந்திய அணியின் முதல் போட்டி வரும் அக்டோபர் 23ஆம் தேதி தொடங்குகிறது.