ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த உலககோப்பை டி20 போட்டித் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கு யார் செல்லப் போகிறார்கள் என்பதற்கான அரையிறுதி போட்டிகள் நாளை தொடங்குகிறது. முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணியும், இரண்டாவது அரையிறுதில் இந்தியா – இங்கிலாந்து அணியும் மோதுகின்றன.




நாளை மறுநாள் நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டி புகழ்பெற்ற அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. அடிலெய்டு மைதானத்தில் கடந்த 2011ம் ஆண்டு முதல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. பேட்டிங்கிற்கு உகந்த ஆடுகளமான அடிலெய்டில் இதுவரை 11 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில், 11 டி20 போட்டிகளிலுமே டாஸ் தோற்ற அணியே வெற்றி பெற்றுள்ளது. இதனால், இந்த டாஸ் ராசி நாளை மறுநாள் நடைபெறும் அரையிறுதிப் போட்டியிலும் தொடருமா..? அல்லது மாறுமா..? என்பது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.






 


அடிலெய்ட் மைதானத்தில் இதுவரை நடைபெற்ற 11 போட்டிகளில் முதலில் பேட் செய்த அணி 7 முறையும், இரண்டாவதாக சேஸ் செய்த அணி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஆட்டமிழக்காமல் 100 ரன்களை விளாசியுள்ளார். தனிநபர் சிறந்த பந்துவீச்சாக ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.




அடிலெய்ட் மைதானத்தில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு எதிராக 233 ரன்களை குவித்துள்ளது. குறைந்தபட்சமாக ஜிம்பாப்வே அணி நெதர்லாந்து அணிக்கு எதிராக 117 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. அடிலெய்ட் மைதானத்தில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 158 ரன்களை சேஸ் செய்ததே அதிகபட்ச ரன்னாகும்.


பேட்டிங்கிற்கு சாதகமான அடிலெய்ட் மைதானத்தில் முதலில் பேட் செய்யும் அணி 168 ரன்களை சராசரியாக குவித்து வருகிறது.