பல நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை வருகின்ற 23 ம் தேதி சந்திக்கிறது. 


பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் தொடக்க ஆட்டத்தில் விளையாடும் லெவன் அணியை ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்திருந்தார். 


உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடர்களில் விளையாடி தொடரை கைப்பற்றியது. இருப்பினும், இந்த தொடரில் விளையாடிய அணியில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால், காயம் காரணமாக இந்திய அணியின் முக்கிய பந்து வீச்சாளர்கள் அணிக்குள் உள்ளே வருவதும், வெளியே செல்வதுமாக இருந்தது ரசிகர்களிடையே சற்று குழப்பத்தை ஏற்படுத்தியது. 


முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் இந்திய அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாகவும், குறைந்தது அரையிறுதிக்காவது செல்லும் என்று கணித்து வருகின்றனர். 


15 பேர் கொண்ட இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். 


இந்த நிலையில், ஐசிசி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உலகக் கோப்பைக்கான டீம் இந்திய அணியில் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி அந்த பட்டியலில், ரிஷப் பன்ட்டுக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக்கை இந்தியாவின் விக்கெட் கீப்பராகவும், ஆறாவது பேட்ஸ்மேனாக தேர்வு செய்தது.


கார்த்திக் அல்லது பண்ட்:


டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் யாரை களமிறக்க உள்ளது என்பது தெளிவாக தெரியவில்லை. அனுபவ வீரர் கார்த்திக் அல்லது பண்ட் ஆகிய இருவரில் ஒருவர் இடம்பிடிப்பார்கள் என்று கருதப்படுகிறது. 


 ஐசிசி கணித்த இந்திய அணி பட்டியல்:


ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அர்ஷ்தீப் சிங்


தொடக்க ஆட்டக்காரர்கள்: ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல்


மிடில் ஆர்டர்: விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக் (Wk)


ஆல்ரவுண்டர்கள்: ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல்


பந்துவீச்சாளர்கள்: ரவிச்சந்திரன் அஷ்வின், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார்


டெர்த் ஓவர்களில் சொதப்பல்:


இந்திய அணி கடந்த சில டி20 போட்டிகளில் டெர்த் ஓவர்களில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. 17,18,19 மற்றும் 20 ஓவர்களில் பந்துவீச்சாளர்கள் அதிகமாக ரன்களை வாரி வழங்கி வருகின்றனர். பும்ரா இல்லாதது அணிக்கு சற்று பின்னடைவாக இருந்தாலும் மற்ற வீரர்கள் சிறப்பாக பந்துவீச வேண்டும். அவர்கள் இந்த கடைசி ஓவர்களில் ரன் விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டும். இது அணிக்கு பெரிய சவாலாக உள்ளது.