ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதற்காக, தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் அணிகளும் தங்களது நாட்டு வீரர்களை அறிவித்துள்ளன. இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய அணியில் ரிஷப்பண்ட், தினேஷ்கார்த்திக் ஆகிய இருவரும் விக்கெட் கீப்பர்களாக இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர் இந்திய அணித் தேர்வு குறித்து கூறியிருப்பதாவது,


“ நீங்கள் தினேஷ்கார்த்திக்கையும், ரிஷப்பண்டையும் ஆடும் லெவனில் ஒன்றாக களமிறக்க முடியாது. அவ்வாறு செய்தால் ஆறாவது பந்துவீச்சாளரை இழக்க நேரிடும். உலககோப்பையில் 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க முடியாது. உங்களுக்கு பந்துவீச்சில் பக்கபலம் தேவை. சூர்யகுமார் யாதவ் அல்லது கே.எல்.ராகுல் மோசமாக ஆடினால் நீங்கள் ரிஷப்பண்டை தொடக்க வீரராக களமிறக்கலாம். இவர்கள் இருவரையும் மிடில் ஆர்டர் வீரர்களாக நான் பார்க்கவில்லை.




ரிஷப்பண்டுடன் ஆட்டத்தை தொடங்கலாம். நான் முன்பில் இருந்தே சொல்வது போல, ஒரு டி20 வீரரை 10 முதல் 12 பந்துகள் ஆடுவதற்காக தேர்வு செய்யக்கூடாது. அவர்கள் ஆட்டத்தை வெற்றி பெற வைப்பார்கள் என்று எந்தவித உத்தரவாதமும் கிடையாது. தினேஷ்கார்த்திக் துரதிஷ்டவசமாக டாப் 5 ஆர்டரில் ஆடுவதற்கு ஆர்வம் காட்டுவது கிடையாது. உங்களது விக்கெட் கீப்பர் டாப் 5 ஆர்டரில் ஆடும் திறமை உடையவராக இருக்க வேண்டும். எந்த ஆர்டரிலும் ஆடும் திறமை கொண்டவராக ரிஷப்பண்ட் உள்ளார்.


கண்டிப்பாக ரிஷப்பண்ட் என்னுடைய பேட்டிங் ஆர்டரில் உள்ளார். மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் தேவை என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு ஆட்டத்தில் வெல்லம் திறன் உங்களிடம் உள்ளதா? என்பதுதான் உங்கள் அளவு கோலாக இருக்க வேண்டும். ரிஷப்பண்டிடம் அது இருக்கிறது. எனவே, 5வது இடத்தில் ரிஷப்பண்ட். 6வது இடத்தில் ஹர்திக் பாண்ட்யா. 7வது இடத்தில் அக்‌ஸர், 8வது இடத்தில் அஸ்வினை வைக்க வேண்டுமா? என்று பாருங்கள்.”


இவ்வாறு அவர் கூறினார்.




38 வயதான தினேஷ் கார்த்திக் 2004ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். டி20 உலககோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியிலே மிகவும் சீனியர் ப்ளேயர் தினேஷ் கார்த்திக் ஆவார். தோனிக்கு முன்பே இந்திய அணிக்காக களமிறங்கிய தினேஷ்கார்த்திக்கிற்கு போதிய வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைக்கவில்லை.


கடந்த ஐ.பி.எல். போட்டியில் பினிஷர் ரோலில் மிரட்டியதால் தினேஷ்கார்த்திக்கிற்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிட்டியுள்ளது.