இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி. உலககோப்பை அணியில் ரிசர்வ்ட் வீரராகவும், ஆஸ்திரேலிய தொடரிலும் இடம்பெற்றிருந்தார். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக முகமது ஷமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார்.




ஆசிய கோப்பைத் தொடரில் ஆடாத முகமது ஷமிக்கு இந்திய உலககோப்பை அணியில் இடம் அளிக்கப்பட்டது. மேலும், அதற்கு முன்னதாக நடைபெற உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடர் வரும் 20-ந் தேதி மொகாலியில் தொடங்க உள்ளது. முகமது ஷமி தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக உமேஷ்யாதவ் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். முகமது ஷமிக்கு ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பின் தன்மை குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.


ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க போன்ற வலுவான அணிகளுக்கு எதிரான டி20 தொடருக்கு செல்வதற்கு முன்பாக அனுபவம் வாய்ந்த முகமது ஷமி கொரோனாவால் விலகியிருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. கடந்த 10 மாதங்களாக இந்திய அணிக்காக டி20 தொடரில் பெரியளவில் ஆடாத முகமது ஷமி, உலககோப்பை இந்திய அணியில் இடம்பெற்றபோது பலரும் விமர்சித்தனர். ஆனால், கடந்த ஐ.பி.எல். தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெறுவதற்கு முகமது ஷமியின் அபார பந்துவீச்சும் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தொடரில் முகமது ஷமி 16 போட்டிகளில் ஆடி 20 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.




இந்திய அணிக்காக முகமது ஷமி கடந்தாண்டு நவம்பர் மாதம் கடைசியாக டி20 போட்டியில் ஆடினார். அதன்பின்னர், முகமது ஷமி இந்திய அணிக்காக எந்தவொரு டி20 போட்டியிலும் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, 33 வயதான முகமது ஷமி இந்திய அணிக்காக இதுவரை 17 டி20 போட்டிகளில் ஆடி 18 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 60 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 216 விக்கெட்டுகளையும், 82 ஒருநாள் போட்டிகளில் ஆடி 152 விக்கெட்டுகளையும், 93 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 99 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.


முகமது ஷமிக்கு பதிலாக இந்திய அணியில் இடம்பெற்றுள்ள உமேஷ்யாதவ் தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் உள்ளார். அவர் விரைவில் இந்திய அணியுடன் இணைய உள்ளார்.


மேலும் படிக்க : BCCI: இனி கிரிக்கெட்டிலும் 'இவருக்கு பதில் இவர்' கான்செப்ட்! மாற்று வீரரை களமிறக்க பிசிசிஐ புதிய ப்ளான்!


மேலும் படிக்க : Irfan Pathan's List: ”உலக கோப்பை கிரிக்கெட் முதல் போட்டியில் இந்த 11 பேர்தான் எனது தேர்வு”: இர்பான் பதான்