ஆஸ்திரேலியாவில் டி20 உலககோப்பைத் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறிய அணிகள் பயிற்சி போட்டியில் ஆடி வரும் நிலையில், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட முன்னாள் சாம்பியன்கள் அடங்கிய சில அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறுவதற்கான முதன்மை சுற்றில் ஆடி வருகின்றனர்.


முதன்மை சுற்றில் ஆடி வரும் இலங்கை அணி முதல் போட்டியிலே நமீபியாவிடம் தோற்ற நிலையில், இன்று கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் இலங்கை மோதி வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 14.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்களை விளாசி வலுவாக இருந்தது.






அப்போது, ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த கார்த்திக் மெய்யப்பன் என்ற பந்துவீச்சாளர் வீசினார்.  அவரது சுழலில் அடித்து ஆட முயற்சித்த பனுகா ராஜபக்சா 5 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலே அதிரடி வீரர் அசலங்கா விக்கெட் கீப்பர் அரவிந்திடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த அடுத்த பந்திலே மெய்யப்பனின் சுழலில் கேப்டன் தசுன் சனகா ஸ்டம்புகளை பறிகொடுத்தார்.






இதன்மூலம், நடப்பு டி20 உலககோப்பைத் தொடரின் முதல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஐக்கிய அரபு அமீரக வீரர் கார்த்திக் மெய்யப்பன் கைப்பற்றினார். 22 வயதான கார்த்திக் மெய்யப்பன்  வலது கை சுழற்பந்துவீச்சாளர் ஆவார். ஐக்கிய அரபு அமீரக அணிக்காக ஆடினாலும் இவர் சென்னையில் பிறந்தவர். இலங்கை அணிக்கு எதிராக 4 ஓவர்கள் வீசிய கார்த்திக் மெய்யப்பன் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.




கார்த்திக் மெய்யப்பன் இதுவரை 8 ஒருநாள் போட்டிகளில் ஆடி 10 விக்கெட்டுகளையும், 13 டி20 போட்டிகளில் ஆடி 21 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 2019ம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கார்த்திக் மெய்யப்பன் ஆடி வருகிறார். 200 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அணி, கார்த்திக் மெய்யப்பன் சுழலில் சிக்கியதால் 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் நிசங்கா 74 ரன்களையும், டி சில்வா 33 ரன்களையும் விளாசினர். குசல் மெண்டிஸ் 18 ரன்களை எடுத்தார். இவர்கள் தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே ரன்களை எடுத்தனர்.


159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐக்கிய அரபு அமீரக அணியினர் இலங்கை பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதுவரை டி20 உலகோப்பையில் ஆஸ்திரேலியாவின் பிரட்லீ (2007ம் ஆண்டு), அயர்லாந்தின் கேம்பர் (2021ம் ஆண்டு), இலங்கையின் ஹசரங்கா (2021ம் ஆண்டு), தென்னாப்பிரிக்காவின் ரபாடா (2021ம் ஆண்டு)  ஆகியோர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.