ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலககோப்பைக்கான சூப்பர் 12 ஆட்டங்கள் வரும் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. இந்தியா தனது முதல் போட்டியில் பரமவைரியான பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்று முடித்த இந்திய அணியினருக்கு உலககோப்பை போட்டித் தொடருக்கு தயாராவதற்கு ஆயத்தமாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுடன் பயிற்சி ஆட்டங்கள் நடத்தப்பட்டது.


இந்த இரு போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றது. இதில், நேற்று ஆஸ்திரேலியாவுடன் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 152 ரன்கள் இலக்கை 18 ஓவர்களிலே இந்திய அணி எட்டிப்பிடித்து அபார வெற்றி பெற்றது. பயிற்சி போட்டி என்பதால் இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்துவீசினார்.




பரிசோதனை முயற்சியாகவே கோலி பந்துவீசினாலும் அவரது பந்துவீச்சு நேற்று நன்றாகவே எடுபட்டது. அவர் 2 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இந்த போட்டியில் பிரதான பந்துவீச்சாளர்களான ஷர்துல் தாக்கூர் 3 ஓவர்கள் வீசி 30 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 4 ஓவர்கள் வீசி 35 ரன்களையும், ஐ.பி.எல்.லில் கலக்கிய வருண் சக்கரவர்த்தி 2 ஓவர்கள் வீசி 23 ரன்களையும் வாரி வழங்கினர்.


ஆனால், முழுநேர பேட்ஸ்மேனாகிய கேப்டன் கோலியோ சிறப்பாக பந்துவீசியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த போட்டியில் விராட் கோலியுடன் ரவிச்சந்திர அஸ்வினும் சிறப்பாக பந்துவீசினார். அவர் 2 ஓவர்கள் மட்டுமே பந்துவீசி 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


டி20 உலககோப்பைக்கான இந்திய அணிக்கான ஆல் ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். பந்துவீச்சாளர்களில் ஷர்துல் தாக்கூர், ஷமி ஆகியோர் சில நேரங்களில் அதிரடியாக பேட்டிங் செய்யக்கூடியவர்கள். அதேபோல, ரோகித் சர்மா, கோலி பகுதிநேரமாக பந்துவீசக்கூடியவர்கள். இந்திய அணியில் இடம்பெற்றுள்ள மூன்று ஆல்ரவுண்டர்களுடன் கூடுதலாக ஒருவர் ஆல் ரவுண்டர் பொறுப்பை ஏற்றால் இந்திய அணிக்கு கூடுதல் பலம் சேரும். கோலி கடந்த பயிற்சி போட்டியில் பந்துவீசியதன் மூலம் அந்த இடத்தை நிரப்புவாரா? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.




96 டெஸ்ட் போட்டிகளில் 11 இன்னிங்சில் 175 பந்துகளை அவர் வீசியுள்ளார். ஆனால், விக்கெட்டுகளை அவர் வீழ்த்தவில்லை. 254 போட்டிகளில் ஆடி 48 போட்டிகளில்  641 பந்துகளை வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 89 டி20 போட்டிகளில் ஆடி 12 போட்டிகளில் மட்டும் பந்துவீசியுள்ளார். 146 பந்துகளில் 198 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். டி20 போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சாக 13 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.


207 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடியுள்ள விராட்கோலி 26 போட்டிகளில் பந்துவீசியுள்ளார். அவர் 251 பந்துகளை வீசி 368 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். அவர் ஐ.பி.எல். போட்டிகளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவர் அதிகபட்சமாக 25 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண