அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட இங்கிலீஷ் ப்ரீமியர் லீக்கின் மார்க் கிளப்பானது பிசிசிஐ வெளியிட்டுள்ள டெண்டர் அழைப்பில் பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. மார்க் கிளப் என்பது மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தனியார் பங்கு நிறுவனம் ஆகும். அந்த நிறுவனம் தற்போது ஐபிஎல் இல் ஒரு புதிய அணியை டெண்டர் எடுக்கும் முடிவில் இருப்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. ITT எனப்படும் பிசிசிஐ வெளியிடும் டெண்டர் என்பது இந்த மாதம் வெளியிடப்பட்ட மறைமுக ஏலம். அதில் அணிகள் வாங்க விரும்புபவர்கள் ஒரு தொகையை நிர்ணயம் செய்து டெண்டரில் பதிவு செய்ய வேண்டும். அதுபோல பலர் செய்ததை எடுத்து அதில் அதிக தொகைக்கு ஏலம் கேட்டவர்கள் அணியை உரிமை கொள்வார்கள். அதற்கு பல ஸ்ட்ரிக்ட்டான விதிமுறைகள் உள்ளன. உதாரணத்திற்கு சராசரியாக 3000 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஒருவரோ அல்லது நிகர சொத்து மதிப்பு 2,500 கொடியோ உள்ளவர்கள் மட்டுமே அணியை வாங்க டெண்டர் கொடுக்க முடியும். டெண்டர் எடுக்க தகுதி பெரும் சராசரி சம்பாத்யமான 3000 கொடியிலிருந்து பிசிசிஐ இந்தமுறை கொஞ்சம் குறைத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் இதில் டெண்டர் எடுக்க உரிமைகள் உண்டு, ஆனால் டெண்டரில் வென்று அணியை வாங்கினால், இந்தியாவில் ஒரு நிறுவனம் தொடங்கிய பிறகே அணியை உரிமை கொள்ள முடியும். 



"அதனால் தொழில்நுட்ப ரீதியாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஐபிஎல் இல் அணிகள் வாங்கலாம், ஆனால் கண்டிப்பாக மான்செஸ்டர் அணி உரிமையாளர்கள் ஐபிஎல் ஏலம் எடுக்க இந்தியா வருவார்களா என்று தெரியாது, ஆனால் அவர்கள் அதற்கான விருப்பத்தின் இருப்பது டெண்டர் குவோட் செய்ததில் தெரிகிறது. பலர் அணிகள் வாங்குவதற்காக மட்டும் டெண்டர் எடுப்பதில்லை, டெண்டர் ஆவணங்களில் பிசிசிஐயின் அடுத்த கட்ட நடவடிக்கைகள், எதிர்கால திட்டங்கள் முதலியன வெளியிடப்பட்டிருக்கும், அதனை தெரிந்து கொள்வதற்காகவும் டெண்டருக்கு சிலர் பதிவு செய்வார்கள். உதாரணமாக டிஸ்னி டெண்டருக்கு பதிவு செய்தால் அதற்காக டிஸ்னி அணிகள் வாங்க விரும்புவதாக அர்த்தம் இல்லை, அவர்கள் ஊடக உரிமைகளை அறிந்துகொள்வதற்காக கூட வாங்கியிருக்கலாம்." என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.



இவர்கள் தவிர அணிகள் வாங்க டெண்டர் கொடுத்துள்ள வேறு நிறுவனங்கள் என்னவென்று பார்த்தால், அதானி க்ரூப், டொரெண்ட் ஃபார்மா, ஆரோபிண்டோ ஃபார்மா, ஆர்பி-சஞ்சீவ் கோயன்கா க்ரூப், ஹிந்துஸ்தான் டைம்ஸ் மீடியா, ஜிண்டால் ஸ்டீல்ஸ், ரோணி ஸ்க்ரூவலா மற்றும் மூன்று தனியார் பங்கு நிறுவனங்களும் டெண்டர் அளித்துள்ளனர். பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையின்படி டெண்டர் ஆவணங்கள் அக்டோபர் 20 வரை மட்டுமே கிடைக்கும். அந்த ஆவணத்தை பெறுவதற்கு மட்டும் 10 லட்சம் கட்ட வேண்டுமாம். புதிய இரண்டு அணிகளை உருவாக்குவதற்கு அகமதாபாத், கட்டாக், இந்தூர், லக்னோ, கவுகாத்தி, தரம்சாலா, புனே, திருவனந்தபுரம் ஆகிய இடங்களே முதலீட்டாளர்கள் மத்தியில் முன்னிலையில் இருக்கும் நகரங்கள் ஆகும். அதிலும் பல கோடி செலவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி ஸ்டேடியம் இருப்பதால் அகமதபாத்திற்கு மவுசு அதிகம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 2010 இல் இருந்து அகமதாபாத் அணி உருவாக மவுசு இருந்துகொண்டிருக்கிறது. பிசிசிஐ ஆவணங்கள் பதிவு செய்ய கடைசி தேதியான அக்டோபர் 25 ல் இருந்து மாற்றம் எதையும் செய்யவில்லை. பெரும்பாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 26 ஆம் தேதி வந்துவிடும் என்று தெரிகிறது.