உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி வரும் 24-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. உலக கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்திய கிரிக்கெட் அணியை ஒருபோதும் வீழ்த்தியதே இல்லை என்பதால் இந்த போட்டி அனைவர் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு அணிகளும் டி20 உலககோப்பை தொடரில் மோதியுள்ள போட்டிகளின் விவரங்களை கீழே காணலாம்.


டர்பன், தென்னாப்பிரிக்கா (இந்தியா வெற்றி)


2007ம்  ஆண்டு அறிமுகமான முதல் உலககோப்பை போட்டித் தொடரில் ஒரே பிரிவில் இடம்பெற்றிருந்த இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் ராபின் உத்தப்பா, தோனி ஆகியோரின் அதிரடியால் இந்தியா 141 ரன்களை குவித்தது. 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியும் 141 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தது. இதனால், டை ஆகிய இந்த போட்டியில் பவுல் அவுட் முறையில் இந்தியா வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 உலககோப்பை வரலாற்றில் இந்தியா தனது வெற்றிக்கணக்கைத் தொடங்கியது.


ஜோகன்ஸ்பர்க், தென்னாப்பிரிக்கா ( இந்தியா வெற்றி)




முதல் டி20 உலககோப்பை இறுதிப்போட்டியில் மீண்டும் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் கவுதம் கம்பீர் 75 ரன்களும், ரோகித் சர்மா கடைசி கட்டத்தில் 30 ரன்களும் அடித்ததால் இந்தியா 157 ரன்களும் குவித்தது. 158 ரன்கள் எடுத்தால் சாம்பியன் என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணியில் கடைசி கட்டத்தில் மிஸ்பா உல் ஹக் தனி ஆளாக போராடினாலும் கடைசி பந்தில் ஆட்டமிழந்ததால் இந்தியா உலக கோப்பையை வென்றது.


கொழும்பு, இலங்கை ( இந்தியா வெற்றி)


2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற உலககோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியில் கம்பீர் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தாலும் விராட் கோலி தனி ஆளாக போராடி 78 ரன்களை குவித்துள்ளார். இதனால், இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்று அசத்தியது. கோலி இந்த போட்டியில் 1 விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார்.




டாக்கா, வங்கதேசம் ( இந்தியா வெற்றி)


2014ம் ஆண்டு வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. இதில், முதலில் பேட் செய்த பாகிஸ்தானை இந்திய வீரர்கள் சிறப்பான பந்துவீச்சால் 130 ரன்களுக்கு சுருட்டினர். இந்திய அணியிலங் அதிகபட்சமாக அமித்மிஸ்ரா ஒரு மெய்டன் ஓவர் வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தொடர்ந்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய இந்திய அணியில் ரோகித் 24 ரன்களையும், ஷிகர் தவான் 30 ரன்களையும் எடுத்து ஆட்டமிழக்க, சுரேஷ் ரெய்னா 35 ரன்களையும், விராட் கோலி 36 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று வெற்றி பெறச்செய்தனர்.


கொல்கத்தா, இந்தியா ( இந்தியா வெற்றி)


2016ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற போட்டி 18 ஓவர்கள் கொண்ட அளவிலே நடத்தப்பட்டது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியில் ஷர்ஜில்கான், அகமது ஷாசாத், உமர் அக்மல், ஷோயிப் மாலிக் ஆகியோர் ஆட்டத்தால் 117 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ஆட்டமிழக்க விராட்கோலி அரைசதம் அடித்து இந்திய அணியை இரண்டு ஓவர்கள் மீதம் வைத்து வெற்றி பெறவைத்தார்.




டி20 உலகக்கோப்பை போட்டிகள் மட்டுமின்றி 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளிலும் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தியதே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண