இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை தொடருக்கு சிறப்பாக தயாராகி வருகிறது. சூப்பர் 12 சுற்றுக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான இரண்டு பயிற்சி போட்டியில் பங்கேற்றது. அந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து அடுத்து இந்திய கிரிக்கெட் அணி சூப்பர் 12 சுற்றில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. 


ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியை 5 முறை வீழ்த்தியுள்ளது. அந்த வெற்றிப் பயணம் வரும் ஞாயிற்றுக்கிழமை போட்டியிலும் தொடரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. டி20 உலகக் கோப்பை தொடர் என்றால் பல்வேறு சாதனைகள் ரெக்கார்டுகள் ஆகியவற்றிற்கு பஞ்சம் இருக்காது. அந்தவகையில் இதுவரை டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மிகவும் குறைவான ஸ்கோர் அடித்து வெற்றிகரமாக அதை டிஃபெண்ட் செய்த அணிகள் யார் யார்? 


 


நியூசிலாந்து (126):




2016ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி மல மல வென விக்கெட்டுகளை இழந்தது. 43 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்தது. இறுதியில் இந்திய அணி 79 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வி அடைந்தது. 


ஆஃப்கானிஸ்தான் (123):


2016ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் ஆஃப்கானிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சூப்பர் 10 போட்டியில் களமிறங்கியது. முதலில் ஆடிய ஆஃப்கானிஸ்தான் நஜிபுல் ஷர்தான் அதிரடியில் 123 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முகமது நபி மற்றும் ரஷீத் கான் பந்துவீச்சில் திணறியது. இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் மட்டும் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி அடைந்தது. 


 






இலங்கை(119):




2014ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடியது. இதில் முதலில் ஆடிய இலங்கை அணி ட்ரென்ட் போல்ட் மற்றும் ஜிம்மி நீஷம் பந்துவீச்சில் குறைந்த ஸ்கோரை அடித்தது. 20 ஓவர்களில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதைத் தொடர்ந்து 120 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி ரங்கானா ஹெர்த சுழலில் சிக்கியது. அவர் 3.3 ஓவர்கள் வீசி 3 ரன்கள் விட்டு கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் மட்டும் 42 ரன்கள் விளாசினார். நியூசிலாந்து அணி 60 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 


மேலும் படிக்க: ‛உலகக்கோப்பையில் இந்தியா தான் வலுவான அணி...’ -பாக்., வீரர் இன்சமாம் கணிப்பு!