இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்திய கிரிக்கெட் அணிக்காக 96 டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி 7765 ரன்களை அடித்துள்ளார். அதேபோல் 254 ஒருநாள் போட்டியில் களமிறங்கி 12,169 ரன்களை அடித்துள்ளார். மேலும் 93 டி20 போட்டிகளில் களமிறங்கி 3225 ரன்களையும் எடுத்து அசத்தியுள்ளார். விராட் கோலி இந்திய அணியில் 2008ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். கிட்டதட்ட 13 ஆண்டுகள் விராட் கோலி இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். 


இதில் பல்வேறு ஐசிசி தொடர்களில் இவர் பங்கேற்று இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளார். இவர் 2009 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடங்கி தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை வரை அனைத்து ஐசிசி தொடர்களிலும் இந்தியாவிற்காக களமிறங்கி உள்ளார். இவற்றில் டி20 உலகக் கோப்பையில் அதிக அரைசதம் கடந்த வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார். இதுவரை டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி 10 முறை அரைசதம் கடந்துள்ளார். 


இந்நிலையில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தொடர்களில் அதிக அரைசதங்கள் கடந்த வீரர்கள் யார் யார்?


ஸ்டீவ் ஸ்மித்(22):




ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். இவர் ஆஸ்திரேலிய அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்களில் ஒருவர். இவர் தற்போது வரை விளையாடியுள்ள ஐசிசி தொடர்களில் 22 முறை அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். 


 


சச்சின் டெண்டுல்கர்(23):




கிரிக்கெட் உலகில் பெரிய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இவர் இந்திய அணிக்காக 24 ஆண்டுகள் வரை விளையாடியுள்ளார். அதில் 6 முறை ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாடியுள்ளார். அத்துடன் சேர்ந்து சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் களமிறங்கியுள்ளார். இவர் மொத்தமாக ஐசிசி தொடர்களில் 23 அரைசதங்களை அடித்துள்ளார். 


 


ஜோ ரூட்(26):




இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஜோ ரூட். இவர் தற்போது வரை ஐசிசி தொடர்களில் மொத்தமாக 26 முறை அரைசதம் கடந்துள்ளார். நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அவர் களமிறங்கவில்லை. 


 


ரோகித் சர்மா(30):




இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா. இவர் 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் முதல் ஐசிசி தொடர்களில் பங்கேற்று வருகிறார். அதில் தற்போது வரை 30 முறை அரைசதங்கள் கடந்து அசத்தியுள்ளார். 


 


விராட் கோலி(32):




இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 2009ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி முதல் ஐசிசி தொடர்களில் பங்கேற்று வருகிறார். இவர் தற்போது வரை 32 அரைசதங்கள் அடித்துள்ளார். அதில் குறிப்பாக டி20 உலகக் கோப்பையில் மட்டும் 10 முறை அரைசதங்களை கடந்து அசத்தியுள்ளார். 


மேலும் படிக்க: "இதுதான் சரியான தருணம்" - ஓய்வு முடிவை அறிவித்தார் ப்ராவோ