இந்த போட்டியை வெல்லும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு அதிகமாகும். தோற்கும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு மங்க தொடங்கும். இப்படியான சூழலில் நடைபெற்ற முக்கிய போட்டியில் இந்திய அணி கடுமையாக சொதப்ப நியுசிலாந்து அணி ரொம்பவே சுலபமாக இந்த போட்டியை வென்றிருக்கிறது.
இந்த தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது இந்திய அணி எடுத்த ஒரு அபத்தமான முடிவே ஆகும். நேற்றைய போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் புவனேஷ்வர் குமாருக்கு பதில் ஷர்துல் தாகூரும் சூரியகுமார் யாதவ்க்கு பதில் இஷன் கிஷனும் சேர்க்கப்பட்டிருந்தனர். இதில் பெரிதாக எந்த பிரச்சனையுமில்லை. இந்த மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்ட விஷயமே.
ஆனால், மிடில் ஆர்டரில் ஆடிய சூரியகுமார் யாதவ்விற்கு பதில் இஷன் கிஷனை கொண்டு வந்து அவரை ஓப்பனராக்க நினைத்தனர். பிரச்சனை எல்லாமே இங்கேதான் தொடங்கியது. இஷன் கிஷன் ஒருவரை ஓப்பனராக மாற்றுவதற்காக ஏற்கனவே செட் ஆகியிருந்த பேட்டிங் ஆர்டரில் கை வைத்தனர். ஓப்பனராக களமிறங்கிக் கொண்டிருந்த ரோஹித் சர்மா நம்பர் 3 வீரராக மாற்றப்பட்டார். கேப்டன் கோலி நம்பர் 3 லிருந்து நம்பர் 4 க்கு இறங்கிக் கொண்டார். கே.எல்.ராகுலும் இஷன் கிஷனும் ஓப்பனிங்கில் ஒரு புதிய கூட்டணியை அமைத்தனர். இந்த மூன்று மாற்றங்களும் அந்த மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைந்த இஷன் கிஷனை ஓப்பனராக்கும் முடிவே இந்தியாவின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.
உலகக்கோப்பை மாதிரியான பெரிய தொடர்களுக்கு செல்லும்போது எந்த குழப்பமும் இல்லாத நிலையான அணியோடு ஒவ்வொரு வீரருக்கும் ஒரு ப்ரத்யேகமான ரோலை கொடுத்து சரியான திட்டமிடலோடு செல்ல வேண்டும். கடைசி நிமிடத்தில் அதுவும் முக்கியமாக வென்றே ஆக வேண்டிய போட்டியில் சென்று இத்தன்னை ஆண்டுகளாக ஓப்பனிங் இறங்கிய வீரரை நம்பர் 3 வீரராக மாற்றுவதெல்லாம் பின்னடைவிற்கே வழிவகுக்கும். இந்த விஷயத்தை குறிப்பிட்டு இந்திய வீரர் இர்ஃபான் பதானும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.
கே.எல்.ராகுலும் இஷன் கிஷனும் கூட்டாக இதற்கு முன் ஒரே ஒரு போட்டியில்தான் ஓப்பனிங்கே இறங்கியிருக்கிறார்கள். இங்கிலாந்துக்கு எதிரான அந்த போட்டியிலேயே அந்த கூட்டணி பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. கே.எல்.ராகுல் டக் அவுட் ஆகியிருந்தார். நல்ல ரெக்கார்டே இல்லாத இதற்கு முன் பெரிதாக கைக்கோர்த்திடாத இணையை நேராக உலகக்கோப்பையில் அதுவும் Do or die போட்டியில் களமிறக்குவதற்கு நியாயமே கற்பிக்க முடியாது. இந்த போட்டியிலும் இந்த இணை வெறும் 11 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.
நம்பர் 3 என்பது கோலிக்கான இடம். நம்பர் 3 அல்லது ஓப்பனிங் இவ்விரண்டு மட்டுமே கோலியின் ஆஸ்தான இடம். அதைத்தாண்டி அவர் இறக்கும்போதெல்லாம் அது அணிக்கு பெரிய அளவில் உதவியதில்லை. நேற்று அந்த இடத்தில் ரோஹித் களமிறங்கியிருந்தார். ஓப்பனரான ரோஹித் கடைசியாக எப்போது இந்திய அணிக்கு நம்பர் 3 இல் இறங்கினார் என்பதே ரசிகர்களுக்கு நியாபகமில்லை. விளைவு, கடந்த போட்டியை போன்றே டாப் ஆர்டர் மொத்தமாக சொதப்பியிருந்தது. இந்திய அணியால் 110 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. பேட்டிங்கிற்கு சாதகமான துபாய் பிட்சில் இதெல்லாம் ஒரு ஸ்கோரே இல்லை.
முக்கியமான போட்டியில் வென்றே ஆக வேண்டிய சமயத்தில் சரியாக தவறான முடிவுகளை எடுத்தது ஜீரணிக்க முடியாத விஷயமாக இருக்கிறது. ஆனால், இதெல்லாம் கோலிக்கு ஒன்றும் புதிதில்லை. கடந்த மூன்று வருடத்தில் மட்டும் நியுசிலாந்துக்கு எதிராக ஐ.சி.சி தொடரில் மூன்று முக்கிய போட்டிகளை இந்தியா இழந்திருக்கிறது. இந்த மூன்று போட்டிகளிலுமே வீரர்களின் சொதப்பலோடு கோலியின் தவறான முடிவுகளும் சேர்ந்தே தோல்விக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
2019 ஓடிஐ உலகக்கோப்பையில் இந்திய அணியும் நியுசிலாந்தும் அரையிறுதியில் மோதியிருந்தன. அதில், இந்திய அணி தோற்று தொடரை விட்டு வெளியேறியிருந்து. அந்த போட்டியில் இந்தியா தொடக்க விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது மூத்த வீரரான தோனியை இறக்காமல் ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் என அதிரடி வீரர்களை முதலில் இறக்கியிருப்பார். தோனி மேலே இறங்கியிருந்தால் அடுத்தடுத்து விக்கெட் விழாமல் தடையை ஏற்படுத்தி நின்றிருப்பார். பின் வரிசையில் தோனியை சுற்றி மற்ற அதிரடி வீரர்கள் இறங்கி ஆட்டத்தை முடித்திருக்க முடியும். ஆனால் கோலி-ரவி சாஸ்திரி இணை அப்படி செய்திருக்கவில்லை. அந்த ஒரு போட்டியில் மட்டுமில்லை. அந்த தொடரின் அணித்தேர்விலிருந்தே கோலி சொதப்பினார்.
அந்த உலகக்கோப்பைக்கு முன்பாக இரண்டு ஆண்டுகளாக நம்பர் 4 வீரருக்கு இந்திய அணி வலைவீசிக் கொண்டிருந்தது. ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் என எக்கச்சக்க வீரர்களை நம்பர் 4 இல் பயன்படுத்தி பார்த்தார்கள். கடைசியாக உலகக்கோப்பைக்கு முன்பு அம்பத்தி ராயுடு அந்த இடத்தில் செட்டில் ஆகி சிறப்பாக ஆடினார். ஆனால், உலகக்கோப்பைக்கான அணியில் அம்பத்தி ராயுடுவின் பெயர் இல்லை. அவருக்கு பதிலாக விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார். விஜய் சங்கர் ஒரு ஆல்ரவுண்டராக 3D வீரராக இருப்பார் என பிசிசிஐ காரணம் கூறியது. அந்த தொடரில் விஜய் சங்கர், ஹர்திக் பாண்ட்யா என அதுவரை நம்பர் 4 இல் ஆடிராத வீரர்கள் அந்த இடத்தில் இறக்கப்பட்டிருந்தனர். இந்த முடிவும் நிலையில்லா தன்மையுமே இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
2019 ஆம் அண்டிற்கு அடுத்து இந்த ஆண்டின் ஜுன் மாதத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியும் நியுசிலாந்தும் மோதியிருந்தன. இதிலும் கோலி-ரவிசாஸ்திரி இணை எடுத்த ஒரு முடிவு வில்லனாக மாறியது. இந்த டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பாகவே இந்திய அணி தனது ப்ளேயிங் லெவனை அறிவித்தது. அதில், இரண்டு ஸ்பின்னர்கள் இடம்பிடித்திருந்தனர். இந்நிலையில் முதல் நாள் ஆட்டம் மழையால் டாஸ் கூட போடப்படாமல் தடைப்பட்டது. போட்டி வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இங்கிலாந்தில் வைத்து நடைபெறுகிறது. கூடவே மழை வேறு பெய்திருப்பதால் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தும் சூழல் இருந்தது.
டாஸ் போடுவதற்கு முன்பே இந்தியா தனது ப்ளேயிங் லெவனை அறிவித்ததால் டாஸ் போடும் வரை இந்திய அணி தனது லெவனில் மாற்றம் செய்து கொள்ள வாய்ப்பு இருந்தது. முன்னாள் வீரர்கள் பலரும் இரண்டு ஸ்பின்னர்கள் தேவையில்லை ஒரு ஸ்பின்னரை விலக்கிவிட்டு கூடுதலாக வேகப்பந்து வீச்சாளர்களை சேர்த்துக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தினார்கள். ஆனால், அதையெல்லாம் கோலி-சாஸ்திரி இணை கண்டுகொள்ளவே இல்லை. இந்தியா இரண்டு ஸ்பின்னர்களோடு இறங்க, நியுசிலாந்து ஒரு ஸ்பின்னரை கூட எடுக்காமல் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சாளர்களுடனேயே களமிறங்கி இந்திய அணியை வாரிச்சுருட்டி டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வென்றது.
இப்போது மூன்றாவது முறையாக டி20 உலகக்கோப்பையில் நியுசிலாந்தை சந்தித்த போதும் மேலே குறிப்பிட்டதை போன்று முடிவு எடுப்பதில் எக்கச்சக்க குழப்பம். தங்களின் வழக்கப்படி முக்கியமான போட்டியில் சரியாக தவறான முடிவை கோலி-சாஸ்திரி இணை எடுத்தது. இதில், ஆச்சர்யம் என்னவெனில் உலகக்கோப்பைகளை வென்ற அனுபவமுடைய தோனி ஆலோசகராக இருந்தும் இந்த மாதிரியான சொதப்பலான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை அணியிலேயே ஒரு போட்டிக்கும் அடுத்த போட்டிக்கும் இடையே தோனி இப்படியான பெரிய மாற்றங்களை செய்ய மாட்டார். அப்படியிருக்கையில், உலகக்கோப்பையில் வென்றே ஆக வேண்டிய போட்டியில் டாப் ஆர்டரில் இத்தனை குழப்பமான முடிவுகள் எதற்கு? கோலி-சாஸ்திரி கூட்டணிக்கு தோனி கொடுத்த ஆலோசனை என்ன? எல்லாமே புரியாத புதிராகவே இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்