ரசிகர்களின் நீண்ட கால ஏக்கத்தைப் போக்கி தோனி தலைமையிலான இந்திய இளம்படையினர் முதல் டி20 போட்டி உலகக்கோப்பையை கைப்பற்றி இன்றோடு 16 ஆண்டுகள் நிறைவடைகிறது. 


அது ஒரு கனாக்காலம்


கிரிக்கெட் போட்டிகள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் விதவிதமான பரிணாமங்களோடும் விதிகளோடும் ரசிகர்களை கவரும் வகையில் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் 2007 ஆம் ஆண்டு டி20 போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டது. முதல் டி20 உலகக்கோப்பை போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்த தொடர் தொடங்குவதற்கு சில மாதங்கள் முன்னர் தான் ஒருநாள் உலககோப்பை போட்டி நடைபெற்றது. இதில் லீக் தொடரிலேயே தோற்று இந்திய அணி வெளியேறியதால் ரசிகர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். 


இதனால் மூத்த வீரர்கள் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கேப்டன் பதவியில் இருந்து அப்போதைய இந்திய அணி வீரர் ராகுல் டிராவிட் விலகினார். புதிய கேப்டனாக யுவராஜ் சிங் தான் தேர்வு செய்யப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்த நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில் தோனி இந்திய அணி கேப்டன் ஆனார். என்னடா இது ஆச்சரியம் என நினைப்பதற்குள் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. 


அசால்ட் காட்டிய இளம் படை 


சச்சின், டிராவிட், கங்குலி என யாரும் இல்லாமல் முழுக்க முழுக்க இளம் இந்திய வீரர்கள் களமிறக்கப்பட்டனர். சேவாக் மட்டும் அனுபவ வீரராக அணியில் இருந்தார். ஆக, மூத்த வீரர்கள் இல்லாமல் இந்திய இளம்படை லீக் சுற்றுகள் கூட தாண்டாது என அனைவரும் கணக்கு போட்டனர். நீங்க போட்ட கணக்கு தப்பு என தண்ணி காட்டினார் தோனி. சொல்லப்போனால் இனி வரலாறு தன் பெயரை எப்படி உச்சரிக்கப் போகிறது என்பதை அன்றைக்கே வெளிச்சம் போட்டு காட்டினார் தோனி. 


தொடர் வெற்றி


இந்திய அணி முதல் போட்டியில் ஸ்காட்லாந்தை எதிர்கொள்ள தயாரானது. ஆனால் அந்த போட்டி நடக்கவில்லை. தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2வது போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்த போட்டி டிராவில் முடிவடைய பௌல் - அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. ரசிகர்களுக்கே இது புதிதாக இருந்தது, அதில் 3-2 என்ற கணக்கில் இந்திய அணி புள்ளிகள் பெற்று முதல் வெற்றியைப் பெற்றது. 


மேலும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் வென்றதில்லை என்ற வரலாறும் மாற்றப்பட்டது. இதனையடுத்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றது இந்தியா. இதில் இங்கிலாந்து போட்டியில் இந்திய அணி வீரர் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டது எல்லாம் நாஸ்டாலஜி மொமண்ட்ஸ். அப்படி இந்தியா அரையிறுதிக்குள் சென்று ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு சென்றது. 


பாகிஸ்தானுடன் இறுதி மோதல் 


தொடர்ந்து செப்டம்பர் 24 ஆம் தேதி பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் இறுதிப்போட்டி நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி கௌதம் கம்பீர் அடித்த 75 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 157 ரன்கள் எடுத்தது. பின்னர் 158 ரன்களை எடுக்க பாகிஸ்தான் அணி களமிறங்கிய நிலையில் ஆட்டம் இருதரப்புக்கும் மாறி, மாறி சாதகமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் அணியில் மிஸ்பா மட்டும் தனி ஒரு ஆளாக இந்திய அணிக்கு பயம் காட்டினார். 


கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜோகிந்தர் சர்மா மீது நம்பிக்கை வைத்த தோனி வீச அழைத்தார். முதலில் தோனி முடிவு தவறு என்றே அனைவரும் நினைத்தனர்.  முதல் பந்து வைட் ஆகவும், அதைத் தொடர்ந்து அடுத்த பந்து டாட் பந்தாக விழுந்தது. இரண்டாவது பந்து சிக்ஸருக்கு சென்றது. ஒரு விக்கெட் மட்டுமே கைவசம் இருந்தது. மூன்றாவது பந்தில் ஸ்கூப் ஷாட்டை மிஸ்பா அடிக்க அது நேராக ஸ்ரீசாந்த் வசம் கேட்ச் ஆக மாறி பாகிஸ்தான் கதை முடிந்தது. இந்திய அணி முதல் டி20 கோப்பையை முத்தமிட்டது. 


1983 ஆம் ஆண்டுக்கு பிறகு கிட்டதட்ட 24 ஆண்டுகள் கழித்து இந்திய அணி உலகக்கோப்பையை கைப்பற்றியது ஒட்டுமொத்த இந்தியாவையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.