ODI World Cup: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர் நடத்தப்படுகிறது. 1975ஆம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 12 உலகக்கோப்பைத் தொடர்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் உலகக்கோப்பைத் தொடர் நடைபெறவுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள உலகக்கோப்பை தொடரில் கலந்து கொண்ட ஒவ்வொரு அணிக்கும் ஒரு சுவாரஸ்யமான கதை மற்றும் வரலாறு உள்ளது.
இதுவரை நடைபெற்ற உலகக்கோப்பைகளில் ஆஸ்திரேலிய அணி மட்டும் 5 கோப்பைகளை வென்று, அதிக கோப்பைகள் வென்ற அணி என்ற பொருமையுடன் உள்ளது. உலகக்கோப்பை தொடங்கப்பட்ட காலத்தில் வேண்டுமானால் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆதிக்கம் நிறைந்த அணியாக இருந்து இருக்கலாம். ஆனால் அந்த அணி இந்தியாவுக்கு எதிராக உலகக்கோப்பையை இழந்த பின்னர் இன்னும் ஒரு முறை கூட இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை. ஆனால் ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை தொடங்கப்பட்ட முதல் தொடரிலேயே இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதுவரை 7 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள ஆஸ்திரேலிய அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது. 1975ஆம் ஆண்டே இறுதிப் போட்டிக்கு சென்ற ஆஸ்திரேலிய அணி 17 ரன்களில் கோப்பையை தவற விட்டது. அதன் பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இணைந்து நடத்திய 1987ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது முதல் உலகக்கோப்பையை வென்றது.
ஹாட்ரிக் உலகக்கோப்பை - ரிக்கி பாண்டிங்கின் காலம்
இதன் பின்னர், 1996ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இந்தியா இணைந்து நடத்திய உலகக்கோப்பைத் தொடரில் இறுதிப் போட்டி வரை வந்த ஆஸ்திரேலிய அணி இலங்கை அணியிடம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி கோப்பையை தவற விட்டது. இதன் பின்னர் மிகவும் ஆக்ரோசமாக 1999ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 132 ரன்களில் சுருட்டி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று தனது இரண்டாவது கோப்பையை நாட்டிற்கு கொண்டு சென்றது அன்றைய கேப்டன் ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி. 1999ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்த ரிக்கி பாண்டிங் அதன் பின்னர் தொடர்ந்து 3 உலகக்கோப்பைகளில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தினார். இந்த காலகட்டத்தில் ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பையில் களமிறங்குகிறது என்றாலே இறுதிப் போட்டிக்கு முடிவதற்கு முன்பாகவே கோப்பையில் அவர்களின் பெயரை பதிக்கும் பணிகளைத் தொடங்குங்கள் என கிரிக்கெட் ரசிகர்கள் கூறும் அளவிற்கு மிகவும் வலுவான அணியாக இருந்தனர்.
2003ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை 125 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்று ஆஸ்திரேலிய அணிக்கான மூன்றாவது கோப்பையை வென்றனர். அதேபோல், 2007ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 53 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது ரிக்கி பாண்டிங்கின் அணி. இந்த வெற்றி மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் வி.வி. ரிச்சர்ட்ஸின் சாதனையாக இருந்த அடுத்தடுத்து கோப்பையை வென்ற கேப்டன் என்ற சாதனையை ரிக்கி பாண்டிங் சமன் செய்தார்.
இதைத்தொடர்ந்து 2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையையும் வென்று ஹாட்ரிக் கோப்பையை வென்ற கேப்டன் என்ற சாதனை பெருமையைப் படைக்க ரிக்கி பாண்டிங் தலைமையிலான பலமான இளம் அணியை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். ஆனால் இந்தியாவில் இவர்களுக்காக காத்துக்கொண்டு இருந்தது கேப்டன் கூல் தோனி தலைமையிலான இந்திய அணி. இந்த தொடரில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி சவாலான ஸ்கோரை எட்டுவதற்கு மிக முக்கிய காரணம் ரிக்கி பாண்டிங்தான். பாண்டிங் களத்தில் 172 நிமிடங்கள் இருந்து 118 பந்துகளைச் சந்தித்து 104 ரன்கள் விளாசி இருந்தார். இதில் 7 பவுண்டரி ஒரு சிக்ஸர் மட்டும்தான் இவருக்கு பவுண்டரிகளில் கிடைத்தது. சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியின் பந்து வீச்சினை நேர்த்தியாக எதிர்கொண்ட ரிக்கி பாண்டிங்கின் முயற்சியால் ஆஸ்திரேலிய அணி 260 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதுடன், ரிக்கி பாண்டிங்கிற்காக காத்துகொண்டு இருந்த சாதனையை முறியடித்தது. இந்த ஆண்டில் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது.
அதன் பின்னர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இணைந்து 2015ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பைத் தொடரினை நடத்தியது. இந்த முறை ஆஸ்திரேலிய அணியை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மைக்கேல் கிளார்க் வழிநடத்தினார். இந்த ஆண்டில் தொடரை நடத்திய இரு நாடுகளுமே இறுதிப் போட்டியில் போட்டியில் மோதிக்கொண்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியை 183 ரன்களில் சுருட்டியது. இதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றதுடன் தனது 5வது கோப்பையை, நான்கு ஆண்டுகளுப் பின்னர் எடுத்துச் சென்றது.
இதுவரை கோப்பைகளை வென்ற அணிகளில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா மட்டும் தலா இரண்டு முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இது மட்டும் இல்லாமல் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளன. ஆனால் ஆஸ்திரேலியா அணி மட்டும் 5 முறை கோப்பையை வென்று அதிக கோப்பைகள் வென்ற அணிகளின் பட்டியலில் டாப்பில் உள்ளது.
பந்து வீச்சில் ஆதிக்கம்
ஆஸ்திரேலிய அணி ஒரு அணிக்கு எதிரான தொடருக்கே மிகவும் வலுவான அணியாகவே களமிறங்குவார்கள். இப்படி இருக்கும்போது உலகக்கோப்பை என்றால் சொல்லவே வேண்டும். உலகக்கோப்பை களத்தில் அதி விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்து வீச்சாளார் என்ற பெருமையை தாங்கி நிற்பவர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளன் மெஹ்ரத் தான். வலது கை மிதவேகப்பந்து வீச்சாளரான இவர் 1996ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைதான் இவரது முதல் உலகக்கோப்பைத் தொடர். ஆனால் அந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதன் பின்னர், 1999, 2003 மற்றும் 2007 என மூன்று ஆண்டுகளும் ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பையை வென்றது. இந்த வகையில் 4 உலகக்கோப்பையிலும் இறுதிப் போட்டி வரை விளையாடியுள்ள கிளன் உலகக்கோப்பை தொடரில் மட்டும் 39 போட்டிகளில் விளையாடி, 325.5 ஓவர்கள் பந்து வீசியுள்ளார். இதில் 42 ஓவர்கள் மெய்டனாக பந்து வீசியுள்ளார். 1,292 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தாலும், மொத்தம் 71 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதில் இவரது சிறந்த பந்து வீச்சு என்பது 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றி மிரட்டியது.
பேட்டிங்கிலும் அசத்தல்
உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் இந்திய அணியின் சச்சின் தெண்டுல்கர் 2 ஆயிரத்து 278 ரன்கள் சேர்த்து முதல் இடத்தில் இருக்கிறார். ஆனால் ஆஸ்திரேலிய அணியின் ஆஸ்தான கேப்டனான ரிக்கி பாண்டிங் ஆயிரத்து 743 ரன்கள் சேர்த்து இரண்டாவது இடத்தில் உள்ளார். அதேபோல் இவர் 2003, 2007 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தியது மட்டும் இல்லாமல் பேட்டிங்கில் ஆயிரத்து 160 ரன்கள் சேர்த்து முதல் இடத்தில் உள்ளார். அதேபோல் உலகக்கோப்பைத் தொடரில் இவர் அதிகபட்சமாக 140 ரன்கள் தனது விக்கெட்டினை இழக்காமல் சேர்த்துள்ளார்.
இப்படியான வெற்றி வாகை சூடிய வரலாற்றினைக் கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தனது முதல் உலகக்கோப்பையை இந்தியா பாகிஸ்தான் இணைந்து நடத்திய தொடரில் தான் வென்றது. இந்நிலையில் இம்முறை இந்தியாவே தனி நாடாக தொடரை நடத்துவதால் ஆஸ்திரேலிய அணி கோப்பையைக் கைப்பற்ற முழு முனைப்புடன் செயல்படும் என உலககிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.