T20 World Champion Team: டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, பிரதமர் மோடியுடன் இணைந்து காலை உணவை சாப்பிட உள்ளது.


இந்திய அணி அணிவகுப்பு:


ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. பார்படாஸில் நடந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி, 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி கோப்பையை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. முன்னதாக கடந்த 2013-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றதே இந்திய அணியின் கடைசி ஐசிசி பட்டமாகும். அதற்குப் பிறகு, அணி பல சந்தர்ப்பங்களில் இறுதிப்போட்டி வரை முன்னேறினாலும் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. இந்நிலையில் டி20 உலகக் கோப்பையுடன் ரோகித் சர்மா தலைமையிலான அணி இன்று மும்பை திரும்புகிறது. அவர்களது வெற்றியை கவுரவிக்கும் வகையில் மும்பையில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற உள்ளது.


இந்திய அணியின் பயண திட்டம்:


பார்படாஸில் இருந்து பிரத்யேக விமானம் மூலம், இந்திய அணி நேற்று இரவே புறப்பட்டது. தொடர்ந்து காலை 6.30 மணியளவில் இந்திய அணி டெல்லி வந்தடைந்தது.  இதையடுத்து, இன்று காலை டி20 உலகக் கோப்பையுடன் பிரதமர் மோடியை சந்திக்கும் இந்திய அணி, அவருடன் சேர்ந்து காலை உணவையும் பகிர்ந்துகொள்ள இருக்கிறது. அந்த நிகழ்ச்சி முடிந்ததுமே உடனடியாக மும்பைக்கு செல்கின்றனர்.


ரசிகர்களுக்கு அழைப்பு:


இதனிடையே, மும்பையில் நடைபெற உள்ள பாராட்டு விழாவில் பங்கேற்குமாறு, ரசிகர்களுக்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சமூக வலைதளம் மூலம்  அழைப்பு விடுத்து இருந்தார். ஆனால், அனைவராலும் இந்த நிகழ்ச்சியை காண முடியாது என்பதால், நேரடி ஒளிபரப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மும்பையில் இந்திய அணியின் வெற்றி அணிவகுப்பு எப்போது?


மும்பையில் இந்திய அணியின் வெற்றி அணிவகுப்பு ஜூலை 4 ஆம் தேதி (வியாழக்கிழமை) மும்பையில் நடைபெற உள்ளது. இது சுமார் 2 கிமீ தூரத்திற்கு வான்கடே மைதானம் வரை நடைபெற உள்ளது.


மும்பையில் இந்திய அணியின் வெற்றி அணிவகுப்பு எந்த நேரத்தில் தொடங்கும்?


மும்பையில் வெற்றி அணிவகுப்பு மாலை 05:00 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். அணிவகுப்பை தொடர்ந்து வான்கடே மைதானத்தில் இந்திய அணிக்கு, ஒரு பாராட்டு விழாவும் நடைபெற உள்ளது.


மும்பையில் இந்திய அணியின் வெற்றி அணிவகுப்பை ரசிகர்கள் எப்படி பார்க்கலாம்?


மும்பையில் நடைபெறும் இந்திய அணியின் வெற்றி அணிவகுப்பை ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சி அலைவரிசையில் பார்க்கலாம். இந்த நிகழ்வின் ஒளிபரப்பை ஆங்கிலத்தில் பார்க்க விரும்புவோர், ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 இல் டியூன் செய்யலாம், ஹிந்தி பார்வையாளர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 இல் ஒளிபரப்பைப் பார்க்கலாம்.