உலககோப்பை டி20 தொடரில் இன்று அபுதாபியில் நடைபெற்று வரும் சூப்பர் 12 ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி நமீபியா அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. ஆப்கான் அணியில் இடம்பெற்றுள்ள அந்த அணியின் முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆப்கான் இந்த போட்டியுடன் தனது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதற்கான அறிவிப்பை அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.


இதனால், இந்த போட்டியில் களமிறங்கிய அஸ்கர் ஆப்கானுக்கு ஆப்கான் வீரர்கள் இரு புறமும் நின்று பேட்டை உயர்த்திப்பிடித்து அவரை மரியாதையுடன் பேட் செய்ய அனுப்பிவைத்தனர். இந்த போட்டியில் 3வது விக்கெட்டிற்கு களமிறங்கிய அஸ்கர் ஆப்கான் அதிரடியாக ஆடி 23 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 31 ரன்கள் எடுத்தார். 19வது ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறிய அவரை நமீபியா வீரர்கள் கைகொடுத்து வாழ்த்தினர். மேலும், மைதானத்தில் குழுமியிருந்த ஆப்கான் மற்றும் நமீபியா ரசிகர்களும் கைதட்டி வழியனுப்பினர்.




அவரது வழியனுப்பு புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட இந்திய ரசிகர்கள், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மூன்று உலககோப்பையை வென்றுத் தந்தவருமான தோனிக்கு இப்படி ஓர் வழியனுப்பு விழா நடத்தவில்லையே என்று மிகவும் வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர்.


இந்திய அணியை கங்குலிக்கு பிறகு முதன்மை அணியாக மாற்றிய தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 4 ஆயிரத்து 876 ரன்களையும், 350 ஒருநாள் போட்டிகளில் ஆடி 10 ஆயிரத்து 773 ரன்களையும், 98 டி20 ஆட்டங்களில் ஆடி 1,617 ரன்களையும், 220 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 4 ஆயிரத்து 746 ரன்களையும் குவித்துள்ளார்.


2014ம் ஆண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின்போதே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது ஓய்வை திடீரென அறிவித்தார். 2004ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான தோனி, 2019ம் ஆண்டு உலககோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துடன் தனது கடைசி ஒருநாள் போட்டியை ஆடினார். 2006ம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் அறிமுகமான தோனி 2019ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தனது கடைசி டி20 போட்டியில் ஆடியுள்ளார்.




இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்துவிட்டு ஒதுங்கியே இருந்த தோனி திடீரென்று யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் கடந்தாண்டு சுதந்திர தினத்தன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால், ரசிகர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். மேலும், அவருக்கு முறையான வழியனுப்பு போட்டி நடத்த முடியவில்லையே என்று சமூக வலைதளங்களிலும் வேதனையுடன் பதிவிட்டனர்.


இந்த நிலையில், இன்று ஆப்கானிஸ்தானின் முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆப்கானுக்கு முறையான வழியனுப்பு ஆட்டம் நடைபெற்று வரும் சூழலில், கிரிக்கெட் ஜாம்பவான், லெஜண்ட் தோனிக்கு வழியனுப்பு ஆட்டம் நடத்த முடியவில்லையே என்று ரசிகர்கள் மீண்டும் இன்று சமூக வலைதளங்களில் வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும் தோனி ஐ.பி.எல். போட்டிகளில் தொடர்ந்து ஆடி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண