உலககோப்பை டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானும், நமீபியாவும் அபுதாபியில் மோதியது. ஆப்கானிஸ்தானின் தொடக்க வீரர் முகமது ஷாசாத்தும், ஹஜ்ரதுல்லா ஷாசாயும் பவர்ப்ளேவில் அதிரடியாக ஆடினர். பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசிய ஷாசாய் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 33 ரன்களில் வெளியேறினார்.


கடந்த போட்டிகளில் அதிரடியாக ஆடிய குர்பாஸ் 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து ஜோடி சேர்ந்த முன்னாள் கேப்டன் அஸ்கர்ஆப்கானும், ஷாசாத்தும் அதிரடியாக ஆடினர். ஷாசாத் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ட்ரம்ப்ள்மேன் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நஜிபுல்லா 7 ரன்களில் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார்.




 அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் முகமது நபியும், அஸ்கர் ஆப்கானும் அதிரடியாக ஆடினர். இதனால், ஆப்கான் ஸ்கோர் விறுவிறுவென்று உயர்ந்தது. இறுதியில் ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. நமீபீயா தரப்பில் ட்ரம்ப்ள்மேன், ஜான்நிகோல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அஸ்கர் ஆப்கானுக்கு இந்த போட்டிதான் கடைசி போட்டி என்பதால் ஆப்கான் வீரர்கள் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிய அவரை ஆப்கான் வீரர்கள் இருபுறமும் பேட்டை உயர்த்தி வழியனுப்பினர்.




161 ரன்கள் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கி நமீபியாவிற்கு தொடக்கமே மோசமாக அமைந்தது. நவீன் உல் ஹக் வீசிய முதல் ஓவரிலே கிரெக் வில்லியம்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜான்நிகோல் மற்றும் வான்லிங்கென் சற்று நிதானமாக ஆடினர். ஆனால், அதற்குள் வான்லிங்கெனை 11 ரன்னில் நவீன் உல் ஹக் பெவிலியனுக்கு அனுப்பினார்.


கேப்டன் எராஸ்மஸ் 12 ரன்னிலும், ஜான் நிகோல் 14 ரன்னிலும், ஜேன் கிரீன் 1 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர். ஒவ்வொரு 10 ரன்களுக்கும் நமீபியா விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நவீன் உல் ஹக், ரஷீத்கானிற்கு உறுதுணையாக வேகப்பந்துவீச்சாளர் ஹமீதும் அசத்தினார். விக்கெட் கீப்பர் டேவிட் வைஸ் மட்டும் கவுரவமான ஸ்கோரை எட்ட போராடினர். அவரும் 9வது விக்கெட்டாக 30 பந்தில் 2 பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கடைசியில் நமீபியா 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், ஆப்கானிஸ்தான் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.




ஆப்கான் அணியில் நவீன் உல்ஹக், ஹமீது ஹாசன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். குல்பதீன் நைப் 2 விக்கெட்டுகளையும், ரஷீத்கான் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்த வெற்றி மூலம் ஆப்கானிஸ்தான் அணி குரூப் 2 பிரிவில் 2வது இடத்தில் உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண