உலககோப்பை சூப்பர் 12 ஆட்டத்தில் அபுதாபியில் நடைபெற்று வரும் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், நமீபியாவும் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கான் பேட்டிங்கை தொடங்கியது. இதன்படி, ஆட்டத்தை தொடர்ந்த ஹஜ்ரதுல்லா ஷசாயும், முகமது ஷாசாத்தும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவர்ப்ளேவில் இருவரின் அதிரடியால் ஆப்கான் 50 ரன்களை கடந்தது.




அணியின் 53 ரன்களை எட்டியபோது தொடக்க வீரர் ஷசாய் 27 பந்தில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன்  33 ரன்களை எடுத்து வெளியேறினார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் ரஹமதுல்லா குர்பாஸ் 4 ரன்களில் வெளியேறினார். பின்னர் அஸ்கர் அப்கான் மற்றும் முகமது ஷாசாத் ஜோடி சிறிதுநேரம் நீடித்தனர். அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த முகமது ஷாசாத் 33 பந்தில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த போட்டி மூலம் ஷாசாத் டி20 போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.




அடுத்து வந்த நஜிபுல்லா ஜட்ரானும் 11 பந்தில்  7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் ஆப்கானிஸ்தானின் ரன்ரேட் வேகம் குறைந்தது. அடுத்து ஜோடி சேர்ந்த அஸ்கர் ஆப்கனும், முகமது நபியும் மீண்டும் ரன்ரேட்டை உயர்த்தும் வேகத்தில் ஆடினர். தனது கடைசி இன்னிங்சில் ஆடிய அஸ்கர் ஆப்கன் மிகவும் அதிரடியாகவே ஆடினார்.


அவர் 23 பந்தில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 31 ரன்கள் எடுத்த நிலையில் ட்ரம்ப்ள்மேன் பந்தில் 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரை நமீபிய வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்தி அனுப்பினர். மறுமுனையில் கேப்டன் முகமது நபி தொடர்ந்து அதிரடியில் ஈடுபட்டார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை எடுத்தது. கேப்டன் முகமது நபி 17 பந்தில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 32 ரன்களுடன் களத்தில் இருந்தார். குலாதின் நயிப் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.




நமீபியா சார்பில் ஜான்நிகோல் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  ட்ரம்ப்ள்மேன் 4 ஓவர்களில் 34 ரன்களை விட்டுக்கொடுத்த 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஸ்மித் 1 விக்கெட்டை கைப்பற்றினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண