உலகக்கோப்பை டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடின. இதில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்தியா தோற்றாலும் போட்டி முடிந்த பிறகு, பாகிஸ்தான் வீரர்கள் முகமது ரிஸ்வானையும், பாபர்அசாமையும் கேப்டன் கோலி பாராட்டிய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியது. அதேபோல, டாஸ் போட்ட பிறகு விராட்கோலி பாபர்அசாமின் தோளில் கைபோட்டு பெவிலியனுக்கு வந்த புகைப்படங்களும் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் அமைந்தது.




விளையாட்டின் புனிதத்தை உணர்த்தும் விதமாகவும், இந்தியா- பாகிஸ்தானின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையிலும் அந்த புகைப்படங்களின் கீழ் கருத்துக்கள் பதிவிடப்பட்டன. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நாளை விளையாடுகிறது.


இந்த போட்டிக்கு முன்னதாக, பாகிஸ்தானின் இடைக்கால தலைமை பயிற்சியாளர் சக்லைன் முஷ்டாக் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,


“ஒருவேளை இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப்போட்டியில் விளையாடினால் அது மிகவும் பெரிய விஷயமாக இருக்கும். அவர்களை நாங்கள் தோற்கடித்துவிட்டோம் என்பதற்காக அல்ல. நான் இதை உணர்கிறேன். அவர்கள் வலுவான அணி. அனைவரும் அவர்களை பிடித்ததாக கருதுகின்றனர். இன்னும் ஒரு ஆட்டம் அவர்களுடன் விளையாடினால், எங்களது உறவுகள் மேம்பட வழிவகுக்கும்.




முந்தைய ஆட்டத்தில் விராட்கோலி, எம்.எஸ்.தோனி நமது (பாகிஸ்தான்) வீரர்களை நடத்திய விதம், நாம் அனைவரும் மனிதர்கள் என்ற வலுவான செய்தியை உணர்த்தியது. நாம் ஒருவருக்கு ஒருவர் அன்புசெலுத்த வேண்டும். இது வெறும் விளையாட்டுதான் என்று உணர்த்தியுள்ளனர். இந்த செய்தியை அனுப்பிய வீரர்களுக்கு வாழ்த்துக்கள். நட்பு வெல்ல வேண்டும். பகை தோற்க வேண்டும். இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப்போட்டியில் விளையாடினால் அன்பையும், அமைதியையும் பரப்புவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.


நீங்கள் உங்கள் திட்டத்தை செயல்கபடுத்த முடிந்தால், யாருடன் விளையாடுகிறோம் என்பது விஷயமே அல்ல. ஒருவேளை இந்தியா இறுதிப்போட்டிக்கு வந்தால் ஐ,சி.சி. மகிழ்ச்சி அடையும். ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும்.”


இவ்வாறு அவர் கூறினார்.




புல்வாமா தாக்குதல் நடைபெற்றது முதல் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நேரடி கிரிக்கெட் போட்டித்தொடர் நடைபெறாமலே இருக்கிறது. கடந்த 2019 உலககோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் இந்தியாவும், பாகிஸ்தானும் நேருக்கு நேர் விளையாடியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண