தஞ்சாவூர்: ஒசூரில் இன்று 22 மற்றும் நாளை 23ம் தேதிகளில் நடக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே வில்வராயன்பட்டியை சேர்ந்த பாலசுந்தர் (28) தேர்வாகி உள்ளார்.
தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே வில்வராயன்பட்டியை சேர்ந்தவர் பாலச்சுந்தர் (27). சிவில் பி.இ. முடித்துள்ளார். மாற்றுத்திறனாளி ஆன இவருக்கு பிறந்தது முதல் இடதுகை பாதிப்பு இருந்துள்ளது. இவரது தந்தை பழனி கூலித்தொழிலாளி. காலமாகி விட்டார். இவரது தாய் விஜயா தொடக்கப்பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் தன்னிடம் இருக்கும் குறையை பொருட்படுத்தாத பாலச்சுந்தருக்கு இளம் வயதிலேயே கிரிக்கெட் மீது அலாதி பிரியம். இதனால் தீவிர பயிற்சிகள் மேற்கொண்ட பாலச்சுந்தர் உள்ளூர் அளவில் நடந்த பல போட்டிகளில் வெற்றி பெற்றார். இதையடுத்து தேசிய அளவில் ஆக்ராவில் நடந்த இந்தியா- நேபாள் மாற்று திறனாளிகளுக்கான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக பாலச்சுந்தர் தேர்வு செய்யப்பட்டார். அங்கு சிறப்பாக விளையாடிய பாலச்சுந்தர் தற்போது இன்று 22 மற்றும் நாளை 23ம் தேதிகளில் ஓசூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றுள்ளார்.
இந்த டி20 போட்டி தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு இடையில் நடக்கிறது. இதில் தமிழக அணிக்காக தேர்வு பட்டியலில் பாலசுந்தர் இடம்பிடித்துள்ளார்.
இதுகுறித்து பாலசுந்தர் கூறியதாவது:
முடியாதென்ற முடிவு நம் வாழ்க்கையை முடமாக்கும். முடியுமென்ற தீர்வு நம் சாதனையை திடமாக்கும். முனகுகிறவனுக்கு எந்நாளும் விடியாது என்பது நிதர்சனமான உண்மை. பாசி பிடித்த படிக்கட்டு வழுக்குவது மாதிரி அவநம்பிக்கை உள்ள மனம் வாழ்வை பின்னோக்கி வழுக்கித் தள்ளும். அதுபோல்தான் தன்னம்பிக்கையுடன் பயிற்சிகள் மேற்கொண்டேன்.
பல போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் இந்திய அணிக்கு தேர்வு பெற்றேன். அங்கு எனது பங்களிப்பை சிறப்பாக செய்த நிலையில் தற்போது டி20 போட்டி தமிழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி எனது திறமையை வெளிப்படுத்தி கிரிக்கெட்டில் மேலும் பல சாதனைகள் செய்ய முயற்சிகள் மேற்கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.