சையத் முஷ்தாக் அலி கிரிக்கெட் தொடர் கடந்த நான்காம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று விதர்பா மற்றும் மணிப்பூர் அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்றிருந்தது. இந்த போட்டியில் விதர்பா அணியின் அக்சய் கர்னேவர் எனும் பௌலர் வீசிய 4 ஓவர்களையும் மெய்டனாக வீசி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். இது ஒரு உலக சாதனையாக மாறியுள்ளது.



அக்சய் கர்னேவர்



29 வயதாகும் அக்சய் விதர்பா அணிக்காக ஆடிவரும் சுழற்பந்து வீச்சாளர். நேற்றைய போட்டியில் விதர்பா அணியே முதலில் பேட் செய்திருந்தது. ஜித்தேஷ் சர்மா, அதர்வா, வான்கடே போன்ற வீரர்களின் அதிரடியால் அந்த அணி 20 ஓவர்களில் 222 ரன்களை எடுத்தது. மணிப்பூர் அணிக்கு டார்கெட் 223.


மிகப்பெரும் இலக்கை நோக்கி சேஸிங்கை தொடங்கிய மணிப்பூர் அணி 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. விதர்பா அணியில் அக்சய் கர்னேவர் 4 ஓவர்களை வீசியிருந்தார். இந்த 4 ஓவர்களிலுமே மணிப்பூர் பேட்ஸ்மேன்களால் ஒரு ரன்னை கூட எடுக்க முடியவில்லை. அக்சய் 4 ஓவர்களையும் மெய்டனாக வீசியதோடு மட்டுமல்லாமல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். டி20 போட்டியில் ஒரு வீரர் அதிகபட்சமாக 4 ஓவர்களை மட்டுமே வீச முடியும் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.  உலகளவில் டி20 போட்டிகளில் அது சர்வதேச போட்டியோ அல்லது உள்ளூர் போட்டியோ அல்லது ஐ.பி.எல் மாதிரியான ப்ரீமியர் லீக் போட்டியோ எங்கேயுமே ஒரு பௌலர் வீசிய நான்கு ஓவர்களையுமே இதற்கு முன் மெய்டனாக  வீசியதே இல்லை. டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக இப்படி ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.


அக்சய் கர்னேவரை பொறுத்தவரைக்கும் இரண்டு கையிலும் பந்து வீசும் தனித்திறனே அவரை ஏற்கனவே அடையாளப்படுத்திவிட்டது. இரண்டு கையிலுமே பந்து வீசும் பௌலர்கள் 'ambidextrous' பௌலர்கள் என்ற வகைமைக்குள் வருகின்றனர். அதாவது ஒரே போட்டியில் சில ஓவர்களை வலக்கையிலும் சில ஓவர்களை இடக்கையிலும் வீசுவார்கள். அக்சயும் இப்படிப்பட்டவரே. இடக்கையில் சுழற்பந்து வீச்சாளரான அக்சய் சில சமயங்களில் வலக்கையில் ஆஃப் ஸ்பின்னும் வீசக்கூடியவராக இருக்கிறார். நாளுக்கு நாள் நவீனமடைந்து வரும் டி20 கிரிக்கெட்டில் கூடிய சீக்கிரமே இந்த 'ambidextrous' வகையிலான ஸ்பின்னர்கள் ட்ரெண்டாக கூடும். இப்போது வலக்கை பேட்ஸ்மேன்களுக்கு லெக் ஸ்பின்/ இடக்கை ஸ்பின் வீசும் பௌலர்களையும் இடக்கை பேட்ஸ்மேன்களுக்கு ஆஃப் ஸ்பின்னர்களையும் அணிகள் பயன்படுத்துகின்றன. மிஸ்ட்ரி ஸ்பின்னர்கள் என்ற பெயரில் இரண்டு பக்கமும் பந்தை திருப்பும் வருண் சக்கரவர்த்தி, முஜிபுர் ரஹ்மான், மஹீஸ் தீக்ஷனா போன்ற வீரர்களின் தொடர் அறிமுகம் அந்த இலக்கணத்தை உடைத்தது. இந்த வரிசையில் வருங்காலத்தில் 'ambidextrous' ஸ்பின்னர்கள் இன்னும் அதிகமாக எந்த இலக்கணத்திற்குள்ளும் அடங்காமல் பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அக்சய் கர்னேவரின் இந்த உலக சாதனை பெர்ஃபார்மென்ஸ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஐ.பி.எல் இன் மெகா ஏலத்தில் இவருக்காக சில அணிகள் இப்போதே கட்டம் கட்டியிருக்கலாம்.