உலக கிரிக்கெட் பேட்ஸ்மேன்களில் நம்பர் ஒன் வீரராகவும், மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் அற்புதமான பேட்ஸ்மேனாகவும் திகழ்பவர் விராட்கோலி. இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பு வகித்து வந்த விராட்கோலி நேற்றைய நமீபியாவுக்கு எதிரான போட்டியுடன் கேப்டன்சியில் இருந்து விலகியுள்ளார். மேலும், இந்திய அணியும் நடப்பு உலககோப்பை தொடரில் சூப்பர் 12 ஆட்டத்துடன் வெளியேறியது.
இந்த நிலையில், விராட்கோலி தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளதாவது,
“ ஒன்றாக சேர்ந்து நமது இலக்கை அடைவதற்காக வெளியே சென்றோம். துரதிஷ்டவசமாக நாங்கள் சறுக்கியுள்ளோம். எங்களைவிட யாரும் பெரிய ஏமாற்றம் அடையவில்லை. உங்கள் அனைவரின் ஆதரவும், அற்புதமாக இருந்து வருகிறது. இதற்காக நாங்கள் நன்றிக்கடன்பட்டுள்ளோம். நாம் பலமாக திரும்பி வந்து சிறந்த ஆட்டத்தை முன்னிறுத்துவோம். ஜெய்ஹிந்த்…!“
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
உலககோப்பை சூப்பர் 12 ஆட்டத்தில் குரூப் 2 பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி தனது தொடக்கப்போட்டியில் பாகிஸ்தானுடன் தோல்வியடைந்தது. அடுத்த போட்டியிலும் நியூசிலாந்து அணியுடன் தோல்வியைத் தழுவியது. இதனால், குரூப் 2 பிரிவில் இந்தியா 5 போட்டிகளில் ஆடி 2 தோல்வி, ஆப்கான், ஸ்காட்லாந்து, நமீபியா அணிகளுக்கு எதிரான வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. ஆனால், குரூப் 2 பிரிவில் இந்திய அணிதான் அதிக ரன்ரேட்டை பிடித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணியுடனான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்த உலககோப்பை என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் உணர்வுப்பூர்வமாகவே இருந்துள்ளது. இந்திய அணி இந்த தொடரில் இருந்து வெளியேறினாலும், விராட்கோலி இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் கேப்டனாக ஆடிய கடைசி போட்டி இதுவாகும். மேலும், இந்திய அணிக்காக கடந்த நான்கு ஆண்டுகளாக தலைமை பயிற்சியாளராக பணியாற்றிய ரவிசாஸ்திரியும் தனது பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இதனால், அடுத்து இந்தியாவில் நடைபெற உள்ள நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி புதிய கேப்டன், புதிய பயிற்சியாளருடன் களமிறங்க உள்ளது. இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் டி20 போட்டிகளில் விராட்கோலி இனி சாதாரண வீரராக மட்டுமே களமிறங்க உள்ளார். கடந்த ஐ.பி.எல். தொடருடன் பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விராட்கோலி விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்