இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் நேற்று நமீபியா-இந்தியா டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் முடிவுக்கு வந்தது. நான்கரை ஆண்டுகள் ரவி சாஸ்திரி இந்திய அணிக்கு நல்ல வழிகாட்டியாக இருந்து வெற்றிகளைக் குவிக்க உதவியுள்ளார், குறிப்பாக 2 ஆஸ்திரேலியா தொடர் வெற்றிகள், இங்கிலாந்துக்கு எதிரான தொடர் வெற்றி என்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை வேர்ல்ட் பீட்டர்களாக உருவாக்கியதில் ரவி சாஸ்திரி பெருமைப் படலாம். டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் இருவகை லிமிட்டட் ஓவர் தொடர்களில் இந்திய அணி வெற்றிகளைக் கொண்டாடினாலும் ரவி சாஸ்திரி, விராட் கோலி கூட்டணி ஐசிசி கோப்பையை வெல்லவில்லை என்பது நிராசையாகவே மறைந்து போகிறது. உலகக்கோப்பை 2019-ல் அரையிறுதியுடன் வெளியேறியது. அப்போது நம்பர் 4ல் ஒரு ஸ்டெடியான வீரரைக் கண்டறிவதில் சிக்கல் இருந்தது, அதை இன்று வரை நிறைவு செய்ய முடியவில்லை என்றே தெரிகிறது. அதே போல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் ரவி சாஸ்திரியின் வழிநடத்தல் சரியில்லை. அஸ்வினை உட்கார வைப்பது குறித்து பேசா மவுனியாக அவர் கோலியை எதிர்த்துக் கேட்காமல் நமக்கு ஏன் வம்பு என்று இருந்தது விமர்சனங்களை ஏற்படுத்தியது, ஆனால் இப்படி இருப்பது ரவி சாஸ்திரியின் அடிப்படை குணமல்ல என்றும் கூறினார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.






 


இந்நிலையில் தன் கடைசி போட்டி முடிந்து ட்ரெஸ்ஸிங் ரூமில் வீரர்களிடம் பேசினார் ரவி சாஸ்திரி. அவர் பேசுகையில், “கடந்த 5 ஆண்டுகாலம் அனைத்து வடிவங்களிலும் இந்திய கிரிக்கெட் அணி ஆடிய ஆட்டம் நம் அனைவரும் அறிந்ததே. இந்திய அணிதான் கிரேட் கிரிக்கெட் டீம் என்று கூறவில்லை, கிரிக்கெட் வரலாற்றில் கிரேட் அணிகளுள் ஒன்று என்றுதான் கூறுகிறேன். வீரர்கள் அச்சமற்ற கிரிக்கெட்டை வெளிப்படுத்துகின்றனர், வெற்றி ஆசை அவர்களிடம் ததும்புகிறது. எங்கு வேண்டுமானாலும் தங்களை நிரூபிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை இந்த வீரர்களிடம் நான் பார்த்தேன். அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் இப்போது நாம் 2-1 என்று முன்னிலை வகிக்கும் தொடர் நிறைவுறும் அப்போது நான் வர்ணனையாளராக இருப்பேன் என்று நினைக்கிறேன். ஒயிட் பால் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸை வெஸ்ட் இண்டீஸிலும் இலங்கையை இலங்கையிலும் வீழ்த்தியிருக்கிறோம் இவையெல்லாம் விலைமதிப்பற்றவை." என்று உருக்கமாக பேசினார்.



நடப்பு உலகக்கோப்பை தோல்வி குறித்து பேசும்போது, "இந்த தொடரில் 2 தோல்விகள் குறித்து எனக்கு படு ஏமாற்றமே. நான் இங்கு சாக்குப் போக்குகள் கூறப்போவதில்லை. நியூசிலாந்துக்கு எதிராக தைரியமாக ஆடவில்லை. இந்தத் தொடர் வீரர்களுக்கு ஒரு பாடம், அடுத்த ஆண்டு உலகக்கோப்பையில் இதிலிருந்து கற்றப் பாடத்துடன் செயல்படுவார்கள். 2 உலகக்கோப்பைகள் 12 மாதங்களில் வருவது ஆச்சரியம், எனவே அடுத்த முறை இந்திய அணி எழுச்சி பெறும். ஐபிஎல் தொடருக்கும் உலகக்கோப்பைக்கும் கொஞ்சம் இடைவெளி தேவை என்பதை நானும் உணர்கிறேன். உயர் மட்டத்தில் பிரமாதமாக ஆடிய கிரேட் அணியாக இந்திய அணி உள்ளது. அதற்குரிய பெருமைகளை நாம் பறித்து விட வேண்டாம். வீரர்கள் தங்கள் திறமைகளை உயர்த்திக் கொண்ட இந்த இந்திய அணியுடன் பயணித்ததை பெருமையாகக் கருதுகிறேன். ஓய்வறையிலிருந்து உணர்ச்சிவயப்பட்டு வெளியேறுகிறேன் ஆனால் பெருமை மிக்க மனிதனாக." என்று பேசி முடித்தார்.