நவம்பர் 22-ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடும் கர்நாடகாவும் மோதிய சையத் முஸ்தாக் அலி கோப்பை இறுதிப் போட்டியில் தமிழ்நாடு கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. தமிழக வீரரான ஷாரூக்கான் அட்டகாசமாக கடைசி பந்தில் சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைத்தார்.


2006-2007, 2020, 2021 என மூன்று முறை தமிழ்நாடு அணி கோப்பையை கைப்பற்றி அசத்தி இருக்கிறது. கடந்த ஆண்டு வெற்றி பெற்றதன் மூலம் இரண்டாவது முறையாக தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்றது தமிழ்நாடு அணி. இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சமீபத்தில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்தார் தோனி. 


அதனை தொடர்ந்து, சையத் முஸ்தாக் அலி இறுதிப்போட்டியை தோனி பார்த்து கொண்டிருப்பது போல ஒரு புகைப்படம் வெளியாகி வைரலானது. அந்த புகைப்படத்தில் ஷாரூக்கானின் ஃபினிஷிங்கை பார்த்து கொண்டிருக்கிறார் தோனி. கிரிக்கெட் விளையாட்டின் ஆகச்சிறந்த ஃபினிஷரே ஒரு ஃபினிஷிங் கேமை பார்ப்பதா என ஒரு புறம் ரசிகர்கள் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டாடினர். இன்னொரு புறம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷாரூக்கான் இடம் பெறுவாரா எனவும் கமெண்ட் செய்தனர்.






இந்நிலையில், இந்த வைரல் புகைப்படத்தை பற்றி பேசியுள்ள ஷாரூக்கான், ”தோனியிடம் பேசும்போது அவர் நம் திறமைகளை நாம்தான் நம்ப வேண்டும் என சொன்னார். நாம் செய்கின்ற செயல் சரியானதாகவே இருக்கும் என நம்ப வேண்டும் என சொன்னார். ஒரு வேளை, அது தவறாக சென்றால், அதையும் எதிர்கொள்ள தயாராக வேண்டும் என சொல்லி இருக்கிறார்” என தெரிவித்தார்.


ஐபிஎல் தொடரின்போது நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் போட்டியின்போது தோனியை சந்தித்த ஷாரூக்கான் அவருடன் உரையாடினார். அந்த புகைப்படம் அப்பவே வைரலானது. இந்நிலையில், இப்போது தோனியின் அட்வைஸ் இதுதான் என ஷாரூக்கான் பகிர்ந்த ரகசியம் தோனி ரசிகர்களை ‘தல தோனிடா’ என சொல்ல வைத்திருக்கிறது.