உலகக் கோப்பை 2023 போட்டியில் இருந்து வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹாசன் விலகினார். நேற்றைய இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி இந்த உலகக் கோப்பையில் 2வது வெற்றியை பதிவு செய்தது. இந்தநிலையில், அரையிறுதி வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்ட வங்கதேச அணி தங்களது கடைசி போட்டியில் நவம்பர் 11ம் தேதி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
நேற்றைய போட்டியில் ஷகிப்பின் இடது கையின் ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. இருப்பினும், வலி நிவாரணி மருந்துகளை உட்கொண்ட பிறகு தொடர்ந்து பேட்டிங் செய்த அவர், 65 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் பந்து மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட ஷகிப் அல் ஹாசன் ஆட்டநாயகன் விருதை வென்றார். முதலில் குசல் மெண்டிஸ் மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோரின் இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் பின்னர், பேட்டிங்கில் 280 ரன்கள் இலக்கை துரத்தும்போது, இவர் 65 பந்துகளில் 126.15 ஸ்ட்ரைக் ரேட்டில் 12 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் எடுத்து வங்கதேச அணியை வெற்றி பாதாக்கு அழைத்து சென்றார்.
ஷகிப் காயத்தைப் பொறுத்தவரை, எக்ஸ்ரேக்குப் பிறகு எலும்பு முறிவு கண்டறியப்பட்டது என வங்கதேச அணியின் பிசியோவான பெய்ஜெதுல் இஸ்லாம் கான் அப்டேட்டைப் பகிர்ந்துள்ளார். அதில், ஷகிப் தனது இன்னிங்ஸின் ஆரம்பத்திலேயே அவரது இடது ஆள்காட்டி விரலில் அடிபட்டார். தொடர்ந்து, அவர் டேப்பிங் மற்றும் வலி நிவாரணிகளை பயன்படுத்தி தொடர்ந்து பேட்டிங் செய்தார்.
போட்டி முடிந்தபிறகு, டெல்லியில் அவசர எக்ஸ்ரேக்கு உட்படுத்தப்பட்டபோது, இடது மூட்டில் எலும்பு முறிவு உறுதிசெய்யப்பட்டது. குணமடைய மூன்று முதல் நான்கு வாரங்கள் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அவர் தனது சிகிச்சையை பெற இன்று வங்கதேசத்திற்கு செல்கிறார்.” என்று தெரிவித்தார்.
புனேவில் உள்ள மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கம் (எம்சிஏ) மைதானத்தில் நவம்பர் 11 ஆம் தேதி (சனிக்கிழமை) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் களமிறங்க இருக்கிறது. இதையடுத்து, ஷகிப் அல் ஹாசனுக்கு பதிலாக நசும் அகமது அல்லது மஹேதி ஹசன் ஆகியோர் வங்கதேச அணியின் இணையலாம். மேலும், ஷாகிப் இல்லாத நிலையில், நஜ்முல் ஹொசைன் சாண்டோ வங்கதேச அணியை வழிநடத்த வாய்ப்புள்ளது.
வருகின்ற 2025ம் ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன் டிராபியில் இடம்பெற வங்கதேச அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும்.