இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உள்ளூர் டி-20 பிளாஸ்ட் தொடரில், பிராட்லி கர்ரி எனும் வீரர் பிடித்த கேட்ச் காண்போரை மெய் சிலிர்க்க வைத்துள்ளது. கிரிக்கெட் உலகிலேயே இதுதான் தலைசிறந்த கேட்ச் என பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.


டி-20 பிளாஸ்ட்:


இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டி-20 பிளாஸ்ட் தொடரின் நேற்றைய போட்டியில், சஸ்ஸெக்ஸ் ஷார்க்ஸ் மற்றும் ஹாம்ப்ஷைர் ஷார்க்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சஸ்ஸெக்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை குவித்தது. இதையடுத்து இலக்கை நோக்கி ஹாம்ப்ஷைர் அணி களமிறங்கியது.


இலக்கை துரத்திய ஹாம்ப்ஷைர் அணி:


சஸ்ஸெக்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஹாம்ப்ஷைர் அணி 75 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும், டாசன் அதிரடியாக விளையாடி 59 ரன்களை குவித்தார். அவருக்கு உறுதுணையாக மறுமுனையில் பென்னி ஹோவல் அதிரடியாக விளையாடினார். அந்த அணி வெற்றி பெற கடைசி 11 பந்துகளில் 23 ரன்கள் தேவைப்பட்டது.


மெய்சிலிர்க்க வைத்த கேட்ச்:


தைமல் மில்ஸ் வீசிய 19வது ஓவரின் இரண்டாவது பந்தை ஹோவெல் மிட்-விக்கெட் திசையில் தூக்கி அடித்தார். அது சென்ற வேகத்திற்கு நிச்சயம் சிக்சராக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, டீப்-ஸ்கொயரிலிருந்து அதிவேகமாக ஓடிவந்தபிராட் கர்ரி பல அடிதூரத்தை கவர் செய்த பிராட் கர்ரி, கண்மூடித்தனமாக பந்தை நோக்கி காற்றிலேயே எகிறி குதித்தார். அப்போது, காற்றில் பறந்தவாறே தனது இடது கையால் கேட்ச்சை பிடித்து அமர்களப்படுத்தினார். இதைகண்டு மைதானத்தில் இருந்த அனைவரும் ஒருநொடி ஆச்சரியத்தில் உறைந்துபோக, மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி பிராட் கர்ரியை கைதட்டி உற்சாகப்படுத்தினர். இந்த கேட்ச் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






சஸ்ஸெக்ஸ் வெற்றி:


20 ஓவர்கள் முடிவில் ஹாம்ப்ஷைர் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இந்த போட்டியில் பிராட் கர்ரி அபாரமான கேட்ச்சை பிடித்ததோடு, 4 ஓவர்களை வீசி 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.


குவியும் வாழ்த்துகள்:  


இதனிடையே, பிராட் கர்ரி பிடித்த அபாரமான கேட்ச் தொடர்பான வீடியோவை தினேஷ் கார்த்திக், பென் ஸ்டோக்ஸ் போன்ற பல முன்னணி கிரிக்கெட் வீரர்களும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.