இந்தியா - தென்னாப்பிரிக்கா டி 20:



இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, 3 டி 20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.


முன்னதாக, கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெற இருந்த முதல் டி 20 போட்டி மழையின் காரணமாக டாஸ் போடுவதற்கு முன்னரே நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இச்சூழலில், நேற்று (டிசம்பர் 12) செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி 20 போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியுடன் விளையாடியது.


இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் ஓவரின் மூன்றாவது பந்துலேயே யாஜஸ்வி ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை பறிகொடுத்தது. பின்னர் சுப்மன் கில்லும் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார்.


அதன்பின்னர் களம் கண்ட திலக் வர்மா 20 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என மொத்தம் 29 ரன்களை விளாசினார். மற்றொருபுறம் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 6 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் 56 ரன்களை எடுத்தார்.  பின்னர் ரிங்கு சிங் 39 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 68 ரன்கள் குவித்தார்


இப்படியாக இந்திய அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்திருந்தது. இதன்பின் மழை காரணமாக டிஎல்எஸ் முறைப்படி தென்னாப்பிரிக்கா அணிக்கு 15 ஓவர்களில் 152 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 13.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது.


இந்நிலையில், இந்த போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், ”இந்திய அணியின் பேட்டிங்கில் எந்த குறையும் இல்லை.


நாங்கள் சராசரிக்கும் அதிகமான ஸ்கோரை தான் எடுத்தோம். ஆனால் தென்னாப்பிரிக்கா அணி முதல் 5 முதல் 6 ஓவர்கள் சிறப்பாக தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.  அதுபோன்ற ஒரு கிரிக்கெட்டை தான் நாங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். தற்போது அந்த கருத்து இன்னும் சத்தமாக எங்களுக்கு கூறப்பட்டுள்ளதாக கருதுகிறேன். அதேபோல் இந்த சூழலில் பவுலிங் செய்வதே கொஞ்சம் கடினமான ஒன்றாகும்.


எதிர்காலத்திலும் வரலாம்:


ஆனால் எங்கள் வீரர்களிடம் நாம் சாதகமான சூழலில் இருந்து வெளியில் இருப்பதை கூறினேன். இதே நிலை எதிர்காலத்திலும் வரலாம் என்று நான் எங்கள் அணியினரிடம் சொன்னேன். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறினேன். வெற்றி, தோல்வியை கடந்து இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஏனென்றால் மைதானத்தில் என்ன நடந்தாலும் அதனை மைதானத்திலேயே விட்டுவிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.