ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 20 ஓவர் உலக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. அதேநேரம், விராட் கோலியுடன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ், சர்வதேச அளவில் கவனம் பெற்றார். மைதானத்தின் நாலாபுறமும் அவர் எதிரணியின் பந்துவீச்சை சிதறடித்ததன் மூலம், டிவிலியர்ஸை தொடர்ந்து, அடுத்த 360 டிகிரி பிளேயர் சூர்யகுமார் யாதவ் தான் எனவும் பல மூத்த வீரர்களால் பாரட்டப்பட்டார். தொடரில் 189.68 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 239 ரன்களை குவித்து, நடப்பு டி-20 உலகக்கோப்பை தொடரின், ஆட்டநாயகன் விருதுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டார்.


இந்நிலையில், 20 ஓவர் உலக்கோப்பை தொடர்ந்து நியூசிலாந்து அணியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஹர்திக் பாண்டியா தலைமையில் 3 டி-20 போட்டிகள் மற்றும் ஷிகர் தவான் தலைமையில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இரண்டு தொடர்களில் பங்கேற்க உள்ளது. ரோகித் ஷர்மா, விராட் கோலி மற்றும் புவனேஷ்வர் குமார் போன்ற மூத்த வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுளது. பாண்ட்யா தலைமையிலான இந்தியா அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரின் முதல் போட்டியை வரும் 18ம் தேதி வெலிங்டன் நகரில் நடைபெற உள்ளது. அப்போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் வெலிங்டன் நகரை சென்றடைந்துள்ளனர். 






இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஹலோ வெலிங்டன் என பதிவிட்டார். அதனை டிவிட்டரில் டேக் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனையான அமண்டா வெலிங்டன், ஹலோ யாதவ் என சூர்யகுமார் யாதவிற்கு பதிலடி தந்துள்ளார். வெலிங்டன் எனும் நகரை குறிப்பிட்டு சூர்யகுமார் யாதவ் டிவிட்டரில் பதிவிட, அதே பெயரை கொண்ட ஆஸ்திரேலியா வீராங்கனை நகைச்சுவையாக பதிவிட்டு இருப்பதை நெட்டிசன்கள் பலரும் நகைச்சுவையாக பகிர்ந்து வருகின்றனர். நியூசிலாந்து அணி உடனான டி-20 மற்றும் ஒருநாள் தொடரை நிறைவு செய்த பிறகு இந்திய அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. டெஸ்ட் போட்டிகள் அடங்கிய அந்த தொடரில், ரோகித், கோலி உள்ளிட்ட மூத்த வீரர்கள் அணிக்கு திரும்ப உள்ளனர்.