டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் செயல்திறன் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதை ஒப்புக்கொண்ட சுனில் கவாஸ்கர், ஆனால் வீரர்கள் குறைசொல்லும் அளவிற்கு மோசமாக இல்லை என்று கூறினார்.
உலகக்கோப்பை தோல்வி
T20 போட்டிகளில் வீரர்கள் பலர் மனநிலையை மாற்ற வேண்டுமே தவிர உடனடி நடவடிக்கைகள் தேவை இல்லை என்று கூறியுள்ள கவாஸ்கர், முற்றிலும் புதிய அணிக்கான கோரிக்கை தேவையில்லை என்று கூறினார். நான்கு வெற்றிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறிய ஒரே அணியான இந்தியா, நாக் அவுட் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. 169 ரன்கள் இலக்கை 16 ஓவர்களில் விக்கெட்டுகள் எதையும் விட்டுக்கொடுக்காமல் எட்டியது இங்கிலாந்து. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர்.
கடுமையான விமர்சனம்
இந்த போட்டியில் இந்தியாவின் அணுகுமுறை கடுமையாக விமர்சிக்கப்பட்டது மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களின் தேர்வும் குறித்தும் பல விமர்சனங்கள் எழுந்தன. ஆஸ்திரேலிய மைதானங்களின் பவுன்ஸைப் பயன்படுத்திக் கொண்டு, ஆட்டத்தின் ஓட்டத்திற்கு எதிராக ஒரு விக்கெட்டைப் பெற எந்த ஒரு வேகப்பந்து வீச்சாளரும் இந்திய அணியில் இல்லை என்ற கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது.
"போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் இந்தக் கேள்விகள் எதுவும் வந்திருக்காது. ஒரு முக்கியமான போட்டியில் தோற்றதால், அணியில் உள்ள குறைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட துவங்குகிறோம்" என்று கவாஸ்கர் இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
கேப்டன்கள் மாற்றம்
பத்தாண்டுகளுக்கு மேலாக இந்தியா ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் திணறி வரும் வேளையில், அடுத்த முறை வெல்ல விரும்பினால், அதற்காக தயார் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து கூறியுள்ளார் சுனில் கவாஸ்கர். "எனக்குத் தெரியும், பணிச்சுமை மேலாண்மை குறித்த விஷயங்களில் சிக்கல்கள் உள்ளன. நாம் சுமக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அணி கேப்டன்கள் மாறிக்கொண்டே இருப்பதாலும் வீரர்கள் குழம்பலாம்", என்று கூறினார்.
உடனடி மாற்றங்கள் தேவையில்லை
மேலும் பேசிய அவர், "யோசியுங்கள், ஆனால் தோற்றுவிட்டோம் என்பதற்காக மொத்த அணியை மாற்றுவது பற்றி பேச வேண்டாம். நாம் இறுதிப் போட்டிக்கு சென்றிருந்தால், XI இல் யார் விளையாட வேண்டும் என்று இந்நேரம் என்னைப் போன்ற முன்னாள் வீரர்கள் பேசிக்கொண்டிருப்போம். இந்த உடனடி ரியாக்ஷன்களுக்கு நாங்கள் மிகவும் பிரபலமானவர்கள். அணியை வலுப்படுத்தும் நடவடிக்கை அவசியம்தான் என்று எங்களுக்கு தெரியும். அதற்காக நாங்கள் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அழுத்தம் தரக் கூடாது. உங்களையும் என்னையும் தவிர வேறு ஒரு தேர்வுக் குழு உள்ளது. அது அதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளது, அவர்கள்தான் அந்த முடிவுகளை எடுக்க வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.
விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் போன்றவர்கள் இல்லாமல் அடுத்த சுற்றுப்பயணத்திற்காக இந்தியா நியூசிலாந்துக்கு செல்கிறது. நவம்பர் 18 ஆம் தேதி தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 ஐ தொடரில் ஹர்திக் பாண்டியா அணியை வழிநடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஷிகர் தவானுக்கு ஒருநாள் அணியின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.