இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று மொஹாலியில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் போது கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா அரைசதம் விளாசினர். அவர்களுக்கு துணையாக சூர்யகுமார் யாதவ் 46 ரன்கள் விளாசினார். இதன்காரணமாக இந்திய அணி 208 ரன்கள் எடுத்தது. 


இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் முன்னேற்றம் கண்டுள்ளார். ஏற்கெனவே நான்காவது இடத்தில் இருந்த சூர்யகுமார் யாதவ் தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மூன்றாவது இடத்தில் இருந்த பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி சூர்யகுமார் யாதவ் அந்த இடத்தைப் பிடித்துள்ளார். பாபர் அசாம் ஆசிய கோப்பை தொடரில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். அத்துடன் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து டி20 தொடரிலும் அவர் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்காரணமாக தரவரிசையில் அவர் சறுக்கியுள்ளார். 


 






டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். முகமது ரிஸ்வான் 825 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்கா வீரர் எய்டன் மார்க்கரம் 792 புள்ளிகளுடன் உள்ளார். சூர்ய குமார் யாதவ் 780 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்க டி20 தொடர்களில் அசத்தும் பட்சத்தில் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. 


டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் ஏற்கெனவே அதிகபட்சமாக 816 புள்ளிகளை பெற்று இருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் இவர் அந்த புள்ளிகளை பெற்று இருந்தார். டி20 தரவரிசையில் இவருக்கு அடுத்தப்படியாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 14வது இடத்தில் உள்ளார். முன்னாள் கேப்டன் விராட் கோலி 16வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 


டி20 ஆல்ரவுண்டர்கள் வரிசையில் இந்திய அணியின் ஹர்திக் பாண்ட்யா 2 இடங்கள் முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் கடந்ததன் காரணமாக இவர் 2 இடங்கள் முன்னேறி 5வது இடத்தில் நீடிக்கிறார். பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை புவனேஸ்வர் குமார் 2 இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.


டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிராக 3 டி20 போட்டிகளில் களமிறங்குகிறது. எனவே டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணிக்கு இந்த இரண்டு தொடர்களும் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: அதே மொஹாலி.. அதே 211 ரன்கள்.. அன்று இந்தியா.. இன்று ஆஸ்திரேலியா! : இப்படி ஒரு சுவாரஸ்யமா..?