இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது போட்டி அசாம் கவுஹாத்தியில் நடைபெற்றது. இந்திய அணிக்காக பேட்டிங்கில் மிரட்டிய சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் 5 பவுண்டரி 5 சிக்ஸருடன் 62 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரது அதிரடியால் இந்திய அணி 237 ரன்களை விளாசியது.  அதன்பிறகு தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. 


இந்த நிலையில், சூர்யகுமார் 24 ரன்களைக் கடந்தபோது, சர்வதேச அளவில் குறைந்த பந்துகளில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை படைத்தார். முன்னதாக ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த மேக்ஸ்வல் டி20 வடிவத்தில் 604 பந்துகளில் 1000 ரன்களை கடந்தார். தற்போது அதை சூர்யகுமார் உடைத்து 573 பந்துகளில் இந்த் சாதனையை படைத்துள்ளார். அதன்படி, சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் 1000 ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலை பார்க்கலாம்.







  • 573 பந்துகள் - சூர்யகுமார் யாதவ் (இந்தியா)

  • 604 பந்துகள் - க்ளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா)

  • 635 பந்துகள் - கொலின் முன்ரோ (நியூசிலாந்து)

  • 640 பந்துகள் - எவின் லூயிஸ் (வெஸ்ட் இண்டீஸ்)

  • 654 பந்துகள் - திசர பெரேரா (இலங்கை)

  • 656 பந்துகள் - ஜார்ஜ் முன்சி (ஸ்காட்லாந்து)

  • 657 பந்துகள் - டோனி உரா (பப்புவா நியூ கினியா)


அதேபோல், நேற்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் 18 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் அதிவேகமாக அரைசதம் கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக, 12 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை யுவராஜ் சிங் படைத்து முதலிடத்தில் உள்ளார். 


இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர்கள்:



  • யுவராஜ் சிங் - 12 பந்துகள்

  • கேஎல் ராகுல் - 18 பந்துகள்

  • சூர்யகுமார் யாதவ் - 18 பந்துகள்






கடந்த 2021 டி20 உலகக் கோப்பையின் போது ஸ்காட்லாந்துக்கு எதிராக கே.எல். ராகுல் 18 பந்துகளில் 50 ரன்களை விளாசினார் .





தற்போது இந்தியாவின் 360 டிகிரி என்று அன்போடு அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ், சர்வதேச டி20 தரவரிசை பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.