இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி அசாம் கவுஹாத்தியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணியில் கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்து அசத்தினர். அத்துடன் விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது. 


 


238 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது. ஆட்டத்தின் 2வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். அவர் முதல் போட்டியை போல் இன்றைய போட்டியிலும் ஒரே ஓவரில் 2 விக்கெட் எடுத்து அசத்தினார். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 1 ரன்னிற்கு 2 விக்கெட் இழந்து திணறியது. அப்போது களத்தில் இருந்த விளக்குகள் பழுது அடைந்தது. இதன்காரணமாக போட்டி சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. 


 




அதன்பின்னர் மீண்டும் போட்டி தொடங்கிய போது எய்டன் மார்க்கரம் அதிரடி காட்டினார். அவர் 33 ரன்கள் எடுத்திருந்த போது அக்‌ஷர் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த டேவிட் மில்லர் டிகாக் உடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 10 ஓவர்களின் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்தது. 


 


சிறப்பாக விளையாடிய டேவிட் மில்லர் 25 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த குயிண்டன் டி காக் 39 பந்துகளில் அரைசதம் விளாசினார்.  இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்து. சிறப்பாக விளையாடிய டேவிட் மில்லர் 46 பந்துகளில் சதம் கடந்து அசத்தினார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த மில்லர் 47 பந்துகளில் 7 சிக்சர் மற்றும் 8 பவுண்டரிகள் விளாசி 107* ரன்கள் எடுத்தார். மறுமுனையில் குயிண்டன் டி காக் 48 பந்துகளில் 4 சிக்சர் மற்றும் 3 பவுண்டரிகள் விளாசி 68* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.


 


இதன்மூலம் இந்திய சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக முதல் முறையாக டி20 தொடரை வென்றுள்ளது. 2015ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தென்னாப்பிரிக்கா அணி டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவற்றில் தென்னாப்பிரிக்கா அணி ஒரு முறை தொடரை வென்றுள்ளது. அதன்பின்னர் அனைத்து தொடர்களும் சமனில் முடிவடைந்தன. இந்தச் சூழலில் இந்திய அணி முதல் முறையாக டி20 தொடரை வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.