இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளிலும் மட்டும் பங்கேற்று வந்தார். கடந்த ஆண்டு இவர் ஐபிஎல் தொடரிலும் விளையாடவில்லை. கடந்த முறை நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் அவரை எடுக்கவில்லை.


இந்நிலையில் சுரேஷ் ரெய்னா வெளிநாட்டு டி20 தொடர்களில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இந்தி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி சுரேஷ் ரெய்னா உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் ஐபிஎல் தொடரிலிருந்தும் அவர் ஓய்வை அறிவிக்க உள்ளதாக தெரிகிறது. அத்துடன் அவர் இந்த முடிவை உத்தரபிரதேச கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 






இவை தவிர தென்னாப்பிரிக்கா, துபாய் உள்ளிட்ட டி20 தொடர்களிலுள்ள அணிகளுடன் சுரேஷ் ரெய்னா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவர் வெளிநாட்டு டி20 தொடர்களில் அதிக கவனம் செலுத்த உள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் ரெய்னா தற்போது ரோடு செஃப்டி கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளார். அதன்பின்னர் அவர் தென்னாப்பிரிக்கா அல்லது துபாய் டி20 தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிகிறது. 


 






சுரேஷ் ரெய்னா இதுவரை இந்திய அணிக்காக 18 டெஸ்டுகளில் விளையாடி 768 ரன்களும், 226 ஒருநாள் போடிகளின் விளையாடி 5,615 ரன்களும், 78 டி20 ஆட்டங்களில் விளையாடி 1,605 ரன்களும் எடுத்துள்ளார். ரெய்னா 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 32.52 சராசரியில் 5528 ரன்கள் எடுத்துள்ளார். அவரது கணக்கில் ஒரு சதம் மற்றும் 39 அரைசதங்கள் உள்ளன. இந்தியன் பிரீமியர் லீக்கின் 13 சீசன்களில் 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.


ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னாவின் 4 சாதனைகள் :



  •  ஐபிஎல் தொடரில் 5000 ரன்கள் எடுத்த முதல் பேட்ஸ்மேன்

  • ஐபிஎல்    தொடரில் அதிக கேட்ச் பிடித்த வீரர்

  • சிஎஸ்கே அணிக்காக அதிக அரைசதங்கள் அடித்த வீரர்

  • சிஎஸ்கே அணிக்காக அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்


இவ்வாறு பல்வேறு சாதனைகளை சுரேஷ் ரெய்னா தன்வசம் வைத்துள்ளார். மிஸ்டர் ஐபிஎல் என்று அழைக்கப்படும் ரெய்னா ஐபிஎல் தொடரில் ஓய்வை அறிவிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.