ஆசிய கோப்பை தொடரில் முதல் சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய அணி அடுத்து வரும் 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தச் சூழலில் இன்று இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க உள்ளது. இலங்கை அணி முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது. இதனால் இலங்கை அணி நல்ல ஃபார்மில் உள்ளது. 


இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் நடைபெற உள்ளதாக தெரிகிறது. அதன்படி இந்திய அணியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் தீபக் ஹூடாவிற்கு பதிலாக அணியில் அக்சர் பட்டேல் இடம்பெற வாய்ப்பு உள்ளது. 


இவர்கள் தவிர ரவி பிஷ்னோய்க்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வினை சேர்ப்பது தொடர்பாக அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது. இதன்காரணமாக அவர் அணியில் இடம்பிடிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இலங்கை அணியை பொறுத்தவரை கடந்த இரண்டு போட்டிகளில் பெற்ற வெற்றியை தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராகவும் வெற்றி பெற முயற்சி செய்யும் என்று கருதப்படுகிறது. 


இந்தப் போட்டி தொடர்பாக இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்துள்ளது. இருப்பினும் அவர்களுக்கு எந்தவித நெருக்கடியும் இல்லை என்று கருதுகிறேன். ஏனென்றால் அவர்கள் நெருக்கடியுடன் விளையாடுவதாக தெரியவில்லை. விராட் கோலி ஒரு சிறப்பான வீரர். அவர் பற்றி அவ்வளவு விமர்சனங்கள் வந்த போதும் அவர் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து வருகிறார். கடந்த போட்டிகளை போன்று இந்தப் போட்டியிலும் நாங்கள் அதே அணுகுமுறையை பின்பற்றுவோம்”எனத் தெரிவித்துள்ளார்.


இந்திய அணி இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என்பதால் இந்த இரண்டு போட்டிகளையும் இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். 


சூப்பர் 4 சுற்று அட்டவணை:


செப்டம்பர் 3: ஆஃப்கானிஸ்தான்-இலங்கை


செப்டம்பர் 4: இந்தியா-பாகிஸ்தான்


செப்டம்பர் 6: இந்தியா-இலங்கை


செப்டம்பர் 7: பாகிஸ்தான்-ஆஃப்கானிஸ்தான்


செப்டம்பர் 8: இந்தியா-ஆஃப்கானிஸ்தான்


 செப்டம்பர் 9: இலங்கை-பாகிஸ்தான்


செப்டம்பர் 11: இறுதிப் போட்டி சூப்பர் 4 முதலிடம்- இரண்டாம் இடம் பிடித்த அணிகள்


அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும். 


சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் மோதும். ஆசிய கோப்பை தொடரில் நடப்புச் சாம்பியனான இந்திய அணி இம்முறையும் சூப்பர் 4 சுற்றில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.




மேலும் படிக்க:எனக்கு தோனி மட்டுமே மெசேஜ் அனுப்பினார்.. பாகிஸ்தானிடம் தோல்விக்கு பிறகு மனம்திறந்த விராட் கோலி