ஆசிய கோப்பை தொடரில் முதல் சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய அணி அடுத்து வரும் 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தச் சூழலில் இன்று இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க உள்ளது. இலங்கை அணி முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது. இதனால் இலங்கை அணி நல்ல ஃபார்மில் உள்ளது. 


 


இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியிலும் களத்திற்கு வீரர்களுக்கு கோட் மூலம் சிக்னல் அளிக்கப்படும் என்று இலங்கை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இலங்கை அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வூட் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். 


 






அதில், “களத்தில் இருக்கும் வீரர்களுக்கு வெளியே இருந்து உதவி செய்வதில் தவறில்லை. நாங்கள் அதற்காக ஒரு குறியீட்டை பயன்படுத்தி வருகிறோம். இதை இந்தியாவிற்கு எதிரான போட்டியிலும் நாங்கள் செயல்படுத்துவோம். இதில் எந்தவித ராக்கெட் அறிவியிலும் இல்லை. இவை அனைத்தும் களத்தில் இருக்கும் கேப்டனுக்கு வெளியே இருந்து கூறும்  அறிவுரைகள் தான். இதை பல அணிகள் பின்பற்ற தொடங்கியுள்ளன. இது கேப்டனுக்கு அப்படி செய்யலாம் என்று கூறும் அறிவுரையே தவிர இப்படி தான் கேப்டன் செய்ய வேண்டும் என்பதில்லை” எனத் தெரிவித்துள்ளார். 


 


ஆசிய கோப்பை தொடரில் இலங்கை அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வூட் 2டி, டி5,ஏ2,சி4 மற்றும் டி போன்ற குறியீடுகளை பயன்படுத்தி வருகிறார். அந்த குறியீடுகளின் அர்த்தம் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை.





இன்றைய போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் நடைபெற உள்ளதாக தெரிகிறது. அதன்படி இந்திய அணியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் தீபக் ஹூடாவிற்கு பதிலாக அணியில் அக்சர் பட்டேல் இடம்பெற வாய்ப்பு உள்ளது. 


 


இவர்கள் தவிர ரவி பிஷ்னோய்க்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வினை சேர்ப்பது தொடர்பாக அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது. இதன்காரணமாக அவர் அணியில் இடம்பிடிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இலங்கை அணியை பொறுத்தவரை கடந்த இரண்டு போட்டிகளில் பெற்ற வெற்றியை தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராகவும் வெற்றி பெற முயற்சி செய்யும் என்று கருதப்படுகிறது. 


 


இந்திய அணி இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என்பதால் இந்த இரண்டு போட்டிகளையும் இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.