இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்துள்ளவர் சூர்யகுமார் யாதவ். இந்திய அணியின் 360 டிகிரி வீரர் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் அவர், நடப்பு டி20 உலககோப்பையில் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி ரன்களை குவித்து வருகிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சூப்பர் 12 சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி போட்டியில் மிரட்டல் அரைசதம் அடித்தார். அவர் 25 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 61 ரன்கள் விளாசினார். இந்த போட்டியில் அதிரடி அரைசதம் விளாசியதன் மூலம் டி20 கிரிக்கெட் போட்டியில் ஓராண்டில் 1000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முதலிடத்தில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் உள்ளார்.
நடப்பாண்டில் இதுவரை சூர்யகுமார் யாதவ் டி20 போட்டிகளில் 1026 ரன்களை விளாசியுள்ளார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 186.54 ஆகும். அவரின் பேட்டிங் சராசரி 44.60 ஆகும். முகமது ரிஸ்வான் தொடக்க வீரராக களமிறங்கி 1000 ரன்களை கடந்திருப்பதை, சூர்யகுமார் யாதவ் நான்காவது வீரராக களமிறங்கி சாதித்திருப்பது மிகவும் பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
இந்தநிலையில், சூர்யகுமார் யாதவ் மட்டும் ஜொலிக்காவிட்டால் இந்திய அணி 150 ரன்கள் கூட எடுத்திருக்காது என முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "சூப்பர் 12 ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடினார். மைதானத்தில் எல்லா திசையிலும் பந்தை தெறிக்கவிட்டார். அவர் புதிய மிஸ்டர் 360 டிகிரி வீரராக வலம் வருகிறார். அன்றைய நாள் போட்டியில் விக்கெட் கீப்பருக்கு இடது புறமாக சூர்யகுமார் விரட்டிய சிக்ஸர் அவ்வளவு பிரமாதம். அதன் தொடர்ச்சியாக அவர் ஆடிய அனைத்துவிதமான ஷாட்களும் மெய்சிலிர்க்க வைத்தது. 25 பந்துகளில் அவர் அடித்த 61 ரன்களால் இந்திய அணி மெல்போர்ன் மைதானத்தில் தங்களது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இல்லையென்றால் 150 ரன்களை கூட எட்டியிருக்காது.
சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து இதுபோல் ஆடி இந்திய அணிக்காக ரன் சேர்க்க வேண்டும். அவர் மட்டும் அன்றைய போட்டியில் ஜொலிக்க தவறவிட்டால் இந்திய அணி 140- 150 ரன்களை எடுக்க கூட தடுமாறிவிடும். தற்போது கோலியும், சூர்யகுமாரும் நல்ல பார்மில் உள்ளனர். லோகேஷ் ராகுல் மற்றொரு அரைசதம் அடித்தது நல்ல விஷயம். ஆனால், ராகுல் நிலைத்து நின்று ஆடுவது மிக முக்கியம். சூப்பர் 12 சுற்றில் கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் சொல்லி கொள்ளும்படி இல்லை. அரையிறுதியில் அவர் நன்றாக ஆடுவார் என நம்புகிறேன்” என்றார்.
2021ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக ஆடி வரும் 32 வயதான சூர்யகுமார் யாதவ் தன்னுடைய அதிரடியான பேட்டிங்கால் இந்திய அணியில் தன்னுடைய இடத்தை நிலைநிறுத்தியுள்ளார். அவர் இதுவரை 13 ஒருநாள் போட்டியில் ஆடி 2 அரைசதங்களுடன் 340 ரன்களும், 39 டி20 போட்டிகளில் ஆடி 1 சதம் 12 அரைசதங்களுடன் 1270 ரன்களை விளாசியுள்ளார். இவற்றில், தற்போது வரை 1026 ரன்கள் நடப்பாண்டில் விளாசியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை அணியின் முக்கிய வீரரான சூர்யகுமார் யாதவ் 123 போட்டிகளில் ஆடி 16 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 644 ரன்களை விளாசியுள்ளார்.