இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இந்த தொடருக்கு பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் ஆட உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக ஷிகர்தவான் நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த வீரர்களான ரோகித்சர்மா, விராட்கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்திய அணியின் மூத்த வீரர்கள் பற்றி கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “ வீரர்களுக்கு ஓய்வு என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஐ.பி.எல். ஆடும்போது நீங்கள் ஓய்வு எடுத்ததே கிடையாது. பின்னர். ஏன் இந்திய அணிக்காக ஆடும்போது ஓய்வு கேட்கிறீர்கள்? இவ்வாறு கேட்பதில் எனக்கு உடன்பாடே கிடையாது. நீங்கள் இந்தியாவிற்காக விளையாடப் போகிறீர்கள். ஓய்வைப் பற்றி பேசவே கூடாது.
டி20 போட்டிகளில் 20 ஓவர்கள் மட்டுமே. இது உங்கள் உடலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. டெஸ்ட் போட்டிகளில் உடலிலும், மனதிலும் தாக்கம் உண்டாகும். ஆனால், டி20 போட்டிகளில் அதுபோன்ற சிக்கல் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பி.சி.சி.ஐ. இந்த விவகாரத்தில் நிச்சயம் கவனம் செலுத்த வேண்டும். ஏ கிரேட் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் நல்ல ஒப்பந்தத்தில் ஆடுகின்றனர், அனைத்து போட்டிக்கும் ஊதியம் பெறுகின்றனர்.
எந்த நிறுவனங்களின் சி.இ.ஓ.க்கள் அல்லது எம்.டி.க்களுக்கு இந்தளவு ஓய்வு கிடைக்கிறதா? இந்திய கிரிக்கெட்டை தொழில்முறையாக மாற்ற வேண்டுமென்றால் ஒரு வரையறை வேண்டும் என்று கருதுகிறேன். உங்களுக்கு ஓய்வு தேவையென்றால், உங்கள் தொகையை குறைத்துக்கொள்ளுங்கள். பின்னர், நீங்கள் ஆடத்தேவையில்லை. இந்திய அணிக்காக ஆட முடியாது என்று ஒருவரால் எப்படி சொல்ல முடியும். இதனால்தான் நான் ஓய்வு என்ற கருத்தை ஏற்க மறுக்கிறேன்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கவாஸ்கர் கூறியது போல மூத்த வீரர்களான ரோகித்சர்மா, விராட்கோலி, பும்ரா, ஜடேஜா ஆகியோர் எந்தவொரு ஐ.பி.எல். போட்டிகளையும் தவறவிடாமல் ஆடியுள்ளனர். ஆனால், நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடருக்கு பிறகு இந்திய அணி ஆடிய சில தொடர்களில் இவர்கள் ஓய்வில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, சமீபகாலமாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான ரோகித்சர்மா மற்றும் விராட்கோலியின் பார்ம் இந்திய ரசிகர்களை மிகவும் கவலைப்பட வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்