கடந்த ஞாயிற்றுக்கிழமை விக்டோரியா பெண்கள் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பெண்கள் இடையேயான மகளிர் தேசிய கிரிக்கெட் லீக் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் போட்டி தொடங்க சிறிது காலதாமதம் ஆனது. 


அப்போழுது, திடீரென மழைக்கு முன்பாக காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்தது. மழையில் இருந்து பிட்சை பாதுகாக்க மைதானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தார்பாய் கொண்டு மூட முயற்சித்தனர். தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரிக்கவே, பிட்சை மூட முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து, கேப்டன் எலிஸ் பெர்ரி தலைமையிலான விக்டோரியா அணியும், நியூ சவுத் வேல்ஸ் அணியைச் சேர்ந்த சிலரும் மைதான ஊழியர்களுக்கு உதவ முன்வந்தனர். மிக நீண்ட போராட்டத்திற்கு பிறகு வீரர்கள் மற்றும் மைதான பணியாளர்கள் அற்புதமாக இணைந்து இறுதியாக கவர்களை பிட்சின் மீது போர்த்தினர்.


இந்த கவரை பிட்சின் மீது கவர் செய்வதற்கு ஒரு சில வீரர்கள் படுத்து புரளும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


 






நிலைமை சீரானதும் அதன்பிறகு நடைபெற்ற போட்டியில் நியூ சவுத் வேல்ஸ் அணி, விக்டோரியா பெண்களை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.


முதலில் நியூ சவுத் வேல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. விக்டோரியா அணி 25.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து தடுமாறியது. ஆறாவது விக்கெட்டுக்கு அன்னாபெல் சதர்லேண்ட் மற்றும் நிக்கோல் ஃபால்டும் ஜோடி 77 ரன்கள் சேர்த்தனர். ஃபால்டம் 83 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் எடுத்து விக்டோரியா அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுக்க உதவி செய்தார். 


271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூ சவுத் வேல்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக ரேச்சல் ஹெய்ன்ஸ் மற்றும் கேப்டன் அலிசா ஹீலி ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்து வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். 


சிறப்பாக ஆடிய ஹீலி 51 ரன்களில் ஆட்டமிழந்தார், ஹெய்ன்ஸ் 119 பந்துகளில் 96 ரன்கள் எடுத்தார். தஹ்லியா வில்சன் மற்றும் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் இருவரும் ரன் எதுவுமின்றி வெளியேற, அடுத்து களமிறங்கிய எரின் பர்ன்ஸ் 48 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் எடுத்து , 41 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் நியூ சவுத் வேல்ஸ் அணியை வெற்றிபெற செய்தார்.