ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்சில் நேற்று ஒரு விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. நேற்றே ஆஸ்திரேலிய அணி 232 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இந்த நிலையில், போட்டியின் நான்காவது நாளான இன்று ஆஸ்திரேலியா தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடியது.


இரண்டாவது இன்னிங்சை ஆடும் ஆஸ்திரேலிய அணிக்கு இங்கிலாந்த பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர், போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலே, மைக்கேல் நீசெர் 3 ரன்களில் வெளியேறினார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் மார்கஸ் ஹாரிஸ் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். கடந்த இன்னிங்சில் அபாராமாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர் ராபின்சன் பந்தில் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.




55 ரன்ளுக்குள் 4 விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியாவை 5வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த லபுசானேவும், ட்ராவிஸ் ஹெட்டும் ஜோடி சேர்ந்து மீட்டனர். இருவரும் பொறுப்பாக ஆடி அரைசதம் கடந்தனர். அரைசதம் கடந்த சிறிது நேரத்தில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ட்ராவிஸ் ஹெட் ராபின்சன் பந்தில் வெளியேறினார். அவர் 54 பந்தில் 7 பவுண்டரிகளுடன் 51 ரன்களை எடுத்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் மார்னஸ் லபுசானே 6 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்த நிலையில் டேவில் மலான் பந்தில் ஆட்டமிழந்தார். கடந்த இன்னிங்சில் மார்னஸ் லபுசானே சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது, ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களுடன் ஆடி வருகிறது. கேமரூன் கிரீன் 27 ரன்களுடனும், மிட்செல் ஸ்டார்க் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இப்போதே, ஆஸ்திரேலிய அணி 451 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. போட்டி முடிவடைய இன்னும் ஒன்றரை நாட்கள் உள்ளன. ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்தாலும், ஆட்டமிழந்தாலும் அந்த அணியினர் 450க்கும் மேற்பட்ட ரன்களை  இலக்காக நிர்ணயித்திருப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது.




இதனால், இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இங்கிலாந்து வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் விளையாடினால் வெற்றி பெறாவிட்டாலும், போட்டியை டிரா செய்ய இயலும். ஏற்கனவே நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்