இங்கிலாந்து அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், தற்போது நடைபெற்று வரும் ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி தனது கேரியரின் கடைசி போட்டியாக இருக்கும் என உறுதிபடுத்தியுள்ளார். நாளை நான்காவது நாளோடு போட்டி முடிய வாய்ப்புகள் இருப்பதால், வலது கை வேகப்பந்து வீச்சாளர் நாளை அல்லது திங்கட்கிழமை இங்கிலாந்துக்கான டெஸ்ட் கிரிக்கெட் வீரராக தனது கடைசி நாள் என்று உறுதிப்படுத்தினார்.
பிராட் கிரிக்கெட் வாழ்கை
ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஆவார். அவர் இங்கிலாந்து அணிக்காக 166 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 600 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2007 இல் இலங்கைக்கு எதிரான போட்டியில் கொழும்பில் பிராட் அறிமுகமானார். கடந்த 16 ஆண்டுகளில், எல்லா காலத்திலும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக மாறியிருந்தார். தனது பயணத்தில் பல ஏற்ற தாழ்வுகளை கண்டுள்ள அவர் டெஸ்ட் போட்டிகளில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்த ஒருவர் ஆவார்.
ஓய்வு அறிவித்த தருணம்
லண்டனில் மூன்றாவது நாள் ஆட்டத்தின் முடிவில் ஸ்கை ஸ்போர்ட்ஸுடன் பேசிய பிராட், இந்த பெரிய அறிவிப்பை வெளியிட்டு பேசினார், "நாளை அல்லது திங்கட்கிழமை எனது கிரிக்கெட்டின் கடைசி ஆட்டமாக இருக்கும். இது ஒரு அற்புதமான பயணம். நாட்டிங்ஹாம்ஷயர் மற்றும் இங்கிலாந்து பேட்ஜை நான் அணிவது போல் ஒரு பெரிய பாக்கியம் எனக்கு இருக்க முடியாது," என்றார். மேலும் இந்த டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு குறித்து எப்போது முடிவெடுத்தார் என்பதை பேசினார் பிராட்.
இரவு 8.30 மணிக்குதான் முடிவு செய்தேன்
"நேற்று இரவு 8.30 மணிக்குதான் நான் முடிவு செய்தேன். இரண்டு வாரங்களாக நான் அதைப் பற்றி யோசித்து வந்தேன். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போட்டிதான் எனக்கு எப்போதுமே உச்சம். அதில் ஏற்பட்ட சவால்களையும், போர்களையும், அதற்காக அணி கையாண்ட வழியையும் நான் நேசித்தேன். ஆஷஸ் கிரிக்கெட் மீதான காதல் என்றும் மாறாது. எனது கடைசி பேட் மற்றும் பந்து ஆஷஸ் கிரிக்கெட்டில் முடிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்." என்றார்.
ஸ்டோக்ஸிடம் கூறினேன்
அதே பேட்டியின் போது, நேற்றிரவு ஓய்வு பெறுவதற்கான தனது முடிவை பென் ஸ்டோக்ஸிடம் தெரிவித்ததாக பிராட் குறிப்பிட்டார். "நேற்றிரவு ஸ்டோக்ஸிடம் சொன்னேன், இன்று காலை dressing ரூமிலும் சொன்னேன். இது சரியான நேரம் போல் உணர்ந்தேன்," என்றார். ஸ்டூவர்ட் பிராட் நேற்று மாலை வரை தனது முடிவைப் பற்றி முழு உறுதி இல்லாமல் இருந்ததாக தெரிவித்தார். இருப்பினும், அவர் இதுவரை விளையாடி திருப்தியும் மகிழ்ச்சியும் அடைந்ததாக குறிப்பிட்டார்.