இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் சமூக வலைதலங்களில் வைரலாகியுள்ளார். 


ஓய்வை அறிவித்த ஸ்டூவர்ட் பிராட்:


இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட், ஓவலில் நடைபெற்று வரும் நடப்பாண்டு ஆஷஷ் தொடரின் கடைசி போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம், பிராடின் 17 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் பயணம் இன்னும், ஓரிரு நாட்களில் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், பிராட் தனது ஓய்வு முடிவை அறிவித்ததில் இருந்து, இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான யுவராஜ் சிங்கின் பெயர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பின்னணியில் உள்ள கிரிக்கெட் உலகின் மறக்க முடியாத சுவாரஸ்ய சம்பவம் உள்ளதை இந்திய ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே.


யுவராஜ் - பிளெண்ட் ஆஃப் மோதல்:


கடந்த 2007ம் ஆண்டு தென்னாப்ரிக்காவில் நடைபெற்ற அறிமுக டி-20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதின. அதில், யுவராஜ் சிங் பேட்டிங் செய்யும்போது, எதிரணியை சேர்ந்த பிளெண்ட் ஆஃப் வார்த்தைகளை விட இருவருக்கும் இடையே மைதானத்திலேயே கருத்து மோதல் ஏற்பட்டு முறைத்துக்கொண்டனர். இதனால் போட்டியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.






யுவராஜ் அடித்த 6 சிக்சர்கள்:


இந்த மோதல் முடிவுக்கு வந்த பிறகு பந்து வீச வந்தவர்தான், அப்போது வெறும் 21 வயதே ஆன ஸ்டூவர்ட் பிராட். பிளெண்ட் ஆஃப் மீது இருந்த கோவத்தில் எப்படி போட்டாலும் அடிப்பேண்டா என்ற மைண்ட் செட்டில் இருந்த யுவராஜ் சிங், ஸ்டூவர்ட் பிராட் விசிய அந்த ஓவரின் 6 பந்துகளையும் மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்து சிக்சர்களாக மாற்றினார். அதோடு, அந்த போட்டியில் வெறும் 12 பந்துகளிலேயே அரைசதம் விளாசி அசத்தினார். இதனால் தான் பிராட் எப்போது இந்திய அணிக்கு எதிராக களமிறங்கினாலும், யுவராஜ் சிங்கின் பெயர் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தான், பிராட் ஓய்வை அற்வித்ததை தொடர்ந்து, யுவராஜ் சிங்கின் பெயர் டிரெண்டாகி வருகிறது.


சாதனையாளரான பிராட்:


ஒரே ஓவரில் யுவராஜ் சிங் 6 சிக்சர்களை விளாசியது என்பது மிகவும் அரிதான சம்பவம். அதுபோன்ற சூழலை எதிர்கொண்ட வீரர்களில் பெரும்பாலானோர் அதிலிருந்து மீளமுடியாமல் வாழ்க்கையையே தொலைத்தது உண்டு. ஆனால், ஸ்டூவர்ட் பிராட் அதிலிருந்து மீண்டு, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒரு தவிர்க்க முடியாத பந்துவீச்சாளராக உருவெடுத்துள்ளார்.டெஸ்ட் போட்டிகளில் 600வது விக்கெட்டை வீழ்த்திய 5வது பந்து வீச்சாளர் மற்றும் இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் தனதாக்கியுள்ளார்.