இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி தன்னுடைய பதவிக்காலத்தை டி20 உலகக் கோப்பையுடன் நிறைவு செய்தார். டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தது. எனினும் கடைசி மூன்று போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன்மூலம் தன்னுடைய நான்கு ஆண்டுகால இந்திய பயிற்சியாளர் பணியை ரவி சாஸ்திரி நிறைவு செய்தார். 


2016-ம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேவுக்கும் அப்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் 2017-ம் ஆண்டு கும்ப்ளே பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். அவருக்கு பின் இந்திய அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் ஒருவரை மீண்டும் நியமிக்க வேண்டும் என்று பலரும் கருதினர். அந்த சமயத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கபட்டார். 2017ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. அந்தப் போட்டிக்கு பிறகும் ரவி சாஸ்திரி இந்திய பயிற்சியாளர் பதவியை தொடங்கினார். 



ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தபோது, எம்.எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோர் இந்திய அணியை வழிநடத்திச் சென்றுள்ளனர். ஓய்வுக்கு பிறகு தனது அனுபவங்களையும், கருத்துகளையும் அவ்வப்போது பகிர்ந்து வரும் ரவி சாஸ்திரி, தோனியை திட்டியது பற்றி இப்போது பகிர்ந்திருக்கிறார். 


தோனிக்கு கிரிக்கெட் மீது எவ்வளவு ஆர்வம் இருக்கிறதோ அதே அளவு கால்பந்தின் மீதும் ஆர்வம் இருக்கிறது என்பது அவரது ரசிகர்களுக்கு தெரியும். அவ்வப்போது பயிற்சியின்போது தோனி கால்பந்து விளையாடுவதை காண முடியும். அந்த வகையில், ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்குவதற்கு முன்பு தோனி கால்பந்து விளையாடி உள்ளார். ஈர மண்ணில் விழுந்து புரண்டு கால்பந்து விளையாடி கொண்டிருந்த தோனியைப் பார்த்த ரவி சாஸ்திரி “இப்போது விளையாட்டை நிறுத்துங்கள்” என கோபமாக பேசி இருக்கிறார். அதுவரை தோனியைப் பார்த்து அவ்வளவு கோபமாக பேசியது இல்லை என ரவி சாஸ்திரி தெரிவித்திருக்கிறார்.


முக்கியமான போட்டி நடைபெற உள்ளதால், கால்பந்து விளையாடி தோனிக்கு தேவையில்லாத காயம் ஏற்பட்டுவிடுமோ என்ற அக்கறையில் பேசியதாகவும் ரவி சாஸ்திரி தெரிவித்திருக்கிறார். கால்பந்தைவிட்டு தோனியைக் கூட்டிச்செல்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்பதையும் அவர் பதிவு செய்திருக்கிறார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண